தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராமின் 13வது ஆண்டு நினைவு தினம்
படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் 13வது ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
(மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஓகஸ்ட் 11, 1959 – ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெற் இணையதளத்தின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார்.கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.)
‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.
இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்…” என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது.
தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட அனைவராலும் நினைக்கப்படும், மதிக்கப்படும் ஒருவராகத் திகழ்கின்றார்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கூற்றில் சிறி லங்காவில் இன முரண்பாடு உச்சத்தைத் தொட்டபோது அகிம்சையும் வாய்ப் பேச்சும் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தராது என்ற புரிதல் இளைஞர் மத்தியிலே உருவாகி அவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தமது மார்க்கமாகத் தேர்ந்தேடுத்த போது இன உணர்வு மிக்க ஒவ்வொரு தமிழ் இளைஞனும் விடுதலைப் போராட்டத்தோடு தன்னை இணைத்துக் கொண்டான்.
பார்வையாளனாக இருப்பதைவிட பங்காளியாக மாறுவதே மேல் என்ற கொள்கையுடன் தனது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்து சிவராம் எடுத்த முடிவும் அவர் பயணித்த பாதையில் அவருக்குக் கிட்டிய அனுபவமும், அதனால் சம்பாதித்துக் கொண்ட அறிவுமே பிற்காலத்தில் ஊடகத்துறையில் அவர் தனக்கெனத் தனியான முத்திரை பதிக்க பெரிதும் உதவியது.
போராளியாக இருந்த காலத்தில் கூட பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டுப்போக அவர் விரும்பவில்லை என்பது அவரது முன்னாள் தோழர்கள் தற்போதும் நினைவு கூரும் ஒரு விடயம்.
இலக்கியத் துறையின்மீது இருந்த அதீத ஈடுபாடு காரணமாகவே பொதுவாழ்வுக்குள் பிரவேசித்த சிவராம் ஆரம்பம் முதலே கடைப்பிடித்துவரும் தீவிர விமர்சனக் கண்ணோட்டம் அவரது பிற்கால எழுத்துக்களில் நன்கு பரிணமித்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிவராமின் பங்கு எனும் தலைப்பிலே ஆய்வு செய்யப் புறப்படும் ஒருவர் சிவராமை வகைப்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வார் என்பது நிச்சயம். ஏனெனில் சிவராமின் ஆளுமையும் இயங்குதளமும் அத்துணை விசாலமானது.
ஒரு ஊடகவியலாளராகவே சிவராம் வெளிச்சத்துக்கு வந்தார். ‘தராகி’ என்ற புனைபெயருடன் சிங்கள இனத்துவேசத்தைக் கக்கும் பத்திரிகை என வர்ணிக்கப்படும் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையிலேயே அவர் பத்தி எழுத்தாளராக அறிமுகமானார்.
தீவிரத் தமிழ்த் தேசியவாதியான சிவராம் ஒரு சிங்கள இனவெறிப் பத்திரிகையில் எழுதுவதனூடாகத் தனது எழுத்துலக வாழ்வை ஆரம்பித்தமை ஒரு முரண்நகையே.
ஆரம்ப காலங்களில் சிவராமின் எழுத்து கவனிக்கப்படாது விடப்பட்ட போதிலும் தான் சார்ந்த விடுதலை இயக்கமான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடனான தொடர்புகளைத் துண்டித்த பின்னர் அவரின் எழுத்துக்களில் புதிய உத்வேகமும் சடுதியான மாற்றமும் ஏற்பட்டன.
ஆனால், சிவராமின் கருத்தின்படி 90 களின் நடுப்பகுதியில் அவர் வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மேற்கொண்டிருந்த பயணமே அவரின் பிற்கால வாழ்க்கைக்கான செல்நெறியைத் தீர்மானித்தது எனலாம்.
இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக அறியப்பட்ட சிவராம் தீவிர தேசியவாதத்தைக் கைக்கொள்ளக் காரணமான இந்த பயணத்தின் விளைவு சிவராமுடைய எழுத்தின் போக்கை மட்டுமன்றி அன்றைய காலகட்டத்தில் பணியாற்றிய பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் போக்கையும் மாற்றியமைத்தது.
தமிழர்களின் போராட்டம் ஒரு ‘நியாயமற்ற, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம்’ எனச் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் சிங்கள மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்களின் போராட்ட நியாயத்தையும், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதால் மாத்திரமே இலங்கைத் தீவில் அமைதி நிலவும் என்ற யதார்த்தத்தையும் தர்க்க நியாயங்களோடு சிங்களவர்களுக்கும் புரியக் கூடியவாறு சிவராம் ஆங்கிலத்தில விளக்கினார்.
எவருமே துணிந்து செய்ய முன்வராத ஒரு காரியத்தை கொழும்பில் இருந்து கொண்டே செய்ய முன்வந்த சிவராமின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு அப்பால் சிங்களத் தேசியம் பேசிய ஊடகவியலாளர்களுடனும் அவர் திரைமறைவில் தர்க்கிக்க வேண்டியிருந்தது. தான் பத்திரிகைகளில் முன்வைத்த கருத்துக்களுக்காக நேரில் கேள்வி எழுப்பப்பட்ட போதுகளில் அவற்றுக்கு அவர் ஆணித்தரமாகப் பதில் கூறவேண்டி ஏற்பட்டது.
தனது கருத்துக்களுக்காக சிங்கள ஊடகவியலாளர்களுடன் மோதவேண்டிய சூழல் உருவான போதிலும் அவர்களுடனான தொழில்முறை உறவை வளர்த்துக் கொள்ள சிவராம் தவறவில்லை.
அது மட்டுமன்றி சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் மாற்றின ஊடகவியலாளர்களுடனும் பல்வேறு தளங்களில் அவர் கரங் கோர்த்துக் கொண்டார்.
மறுபுறம், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகள் சிங்கள ஊடக அமைப்புக்களால் ‘கண்டு கொள்ளாமல்’ விடப்பட்டபோது ‘இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்’ என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னோடியாக நின்றும் செயற்பட்டார்.
மாமனிதர் சிவராம் எழுதிய இறுதிக் கட்டுரை | ஆய்வு | தராக்கி டி.சிவராம்
எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்
– தராக்கி டி.சிவராம் –
நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். போகிறார். அவர் வரும்போதும் போகும்போதும் தமிழ் ஊடக ஆரவாரம் ஒன்று கிளம்பும். அது மக்களிடையே ஏதோ நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்தும். அவர் வந்த வழியே திரும்பிப் போவார். ஊடக ஆரவாரங்கள் அடங்கும். பின்னர் வழமைபோல அது இது என்று எமது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். சொல்ஹெய்ம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டாக்கக்கூடிய வகையில் அறிக்கை விடுகிறார். அல்லது செய்தியாளர்களுக்குக் கருத்துச் சொல்கிறார்.
இன்னும் சில கிழமைகளில் சுனாமிப் பொதுக்கட்டமைப்பு வந்துவிடும் என அவர் இம்முறை இங்கு வருவதற்கு முன்னர் ஒரு வெளிநாட்டுச் செய்தி நிறுவனத்திற்குச் செவ்வி கொடுத்திருந்தார். அது மட்டுமன்றி புலிகளின் மட்டு-அம்பாறை படைத் தளபதி பானுவைச் சந்தித்த பின்னர் பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்று சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் மிக ஆர்வத்துடன் இருப்பதாக அவர் அழுத்திக் கூறினார்.
பொதுக்கட்டமைப்பு கிடைக்கப்போவதில்லை. ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் சிறிலங்காவின் அரசியல் நுனிப்புல் மேய்ந்தவர்களுக்குக்கூட மிகமிக அப்பட்டமாகப் புரிந்திடக்கூடிய உண்மையாகும். இதில் யாருக்கும் இம்மியளவும் சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக பொதுக்கட்டமைப்பு வழங்கப்பட்டால் தாம் சந்திரிகாவின் அரசிலிருந்து வெளியேறிவிடுவோம் என ஜே.வி.பி மிகத் தெளிவாக அமெரிக்கப் பிரதிநிதி கிறிஸ்ரினா ரொக்காவிடம் கூறிவிட்டது.
இங்கு நாம் சொல்ஹெய்ம்மைக் கடிந்து கொள்ளமுடியாது. எம்மை இலவு காத்த கிளிகளாக்கும் நோக்குடன்தான் அவர் இங்கு வருகிறார் என்றோää சந்திரிகா அரசு எமது காதில் வழமைபோல் பூச்சுற்றுவதற்கு அவர் மலர் கோத்துக் கொடுக்கிறார் என்றோ நாம் அவரைக் கண்டனம் பண்ண முடியாது. ஏனெனில் அவர் எமது உடன்பாட்டுடனேயே இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான அனுசரணையாளராக அமர்த்தப்பட்டார். ஏதோ ஒரு தீர்வோ அல்லது அதைநோக்கிய முன்னேற்றமோ வருகிறது என்றுதான் அவர் சொல்வார். சொல்ல முடியும். அவருடைய கதையில் எடுபட்டு பேயராகுவதா இல்லையா என்பது எம்மைப் பொறுத்தது.
பொதுக்கட்டமைப்பு ஏற்படுத்துமாறு பல வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலிகளின் தடையை நீடித்து வரும் அமெரிக்காகூட இதையே வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பொதுக்கட்டமைப்பு சரிவராவிடின் புலிகளுக்கு நேரடியாகவே உதவி வழங்குவதற்கான ஏற்பாடொன்று உண்டாக்கப்படல் வேண்டுமென சில நாடுகள் கருதத் தலைப்பட்டுள்ளன. இதைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசிற்கு நேரடியான எந்த வழியும் தற்போது இல்லை. எனவே இக்கட்டமைப்பு உண்டாக வேண்டும் என்பதில் தானும் அக்கறையாக இருக்கிறேன் என சிறிலங்கா அரசு அறிக்கை விடுகிறது. அக்கறையாக இருக்கிறோம் ஆனால் சில விடயங்களைப் பேசி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது எனக் கூறிக்கொண்டிருந்தால் காலம் எப்படியாவது உருண்டோடி விடும்.
அந்த ஓட்டத்தில் உதவி வழங்கும் நாடுகளும் புலிகளும் தமிழ் மக்களும் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை வழமைபோல மறந்துவிடுவார்கள் என சிறிலங்கா அரசு கணக்குப் போடுகிறது. சொல்ஹெய்மினுடைய வருகைகளும் கூற்றுக்களும் இந்தக் கணக்கிற்கு மிகவும் வலுச்சேர்க்கின்றன. வடக்குக் கிழக்கின் உடனடி மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றுவதற்கென ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ( Sihrn) உங்களுக்கு ஓரளவு ஞாபகம் இருக்கும் அதையும் அதன் பின்வந்த சில ஒழுங்குகளையும் சிறிலங்கா அரசு இப்படித்தான் பம்மாத்திற்று. அப்போதும் சொல்ஹெய்ம் வந்து போனார். இரு தரப்பும் ஏதோவொரு உடன்பாட்டை அண்மித்துக் கொண்டிருப்பதாக அறிக்கை விட்டார். அவருடைய ஒவ்வொரு வருகையையும் விழுந்தடித்துக்கொண்டு எமது ஊடகங்கள் ஆரவாரப்படுத்தின. (இதில் தமிழ்நெற்றும் விதிவிலக்கல்ல) நடந்ததோ ஒன்றுமில்லை. மாறாக தமிழ் பேசும் மக்களை பேய்க்காட்டிக்கொண்டு அவர்களை ஒற்றையாட்சி அமைப்பிற்குள் வாழப்பழக்குவதற்கு சொல்ஹெய்மின் வருகைகளும் அதையொட்டி எழும் எதிர்பார்ப்புக்களும் அரிய வாய்ப்பாக அமைந்தன அமைகின்றன.
ஏலவே கூறியதுபோல இதில் நாம் நேர்வேயையோ அதன் சிறப்பு தூதுவரையோ குற்றஞ்சாட்டவும் முடியாது. குறை கூறவும் முடியாது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். இதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற கேள்வி உடனே தோன்றும். முதலாவது சொல்ஹெய்மின் வருகையைச் சுற்றி உண்டாகும் ஊடக ஆரவாரத்தில் மக்கள் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகள் அடிபட்டுப் போகின்றன.
இந்த உண்மைகள் மறைந்துபோவது நுட்பமாகச் செயற்படும் சிங்கள மேலாண்மையாளர்களுக்கு மிக வாய்பாகிவிடுகிறது. ஏன்? பொதுக்கட்டமைப்பு விடயத்தை எடுத்துக்கொள்வோம். வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவற்றை பற்றியதே இந்தப் பொதுக்கட்டமைப்பாகும். இந்த மூன்றையும் எப்படி எதிர்கொள்வது எப்படி இவற்றிற்குத் தீர்வு காண்பது என்பது பற்றியதாகவே புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற ஆறுசுற்றுப் பேச்சுக்களும் அமைந்திருந்தன. நடந்ததென்ன? ஒன்றுமேயில்லை. வாழ்விட அழிவுகளைச் சரிசெய்வது என்றாலோ இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவது என்றாலோ தேவைப்படுவது முதலில் நிலம்.
பின்னர் பணம். இவையிரண்டுமே சிறிலங்கா அரசின் அசைக்கமுடியாத கட்டுப்பாட்டில் உள்ளன. நிலத்தையும் நிதியையும் இவையிரண்டையும் உரிய முறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான நிறைவேற்று அதிகாரத்தையும் (executive power) எந்தவொரு கட்டமைப்பிற்கும் பகிர்ந்தளிப்பதை சிறிலங்காவின் அரசியல் யாப்பு தடைசெய்கிறது. இதனாலேயே போரில் அழிந்துபோன எமது வாழ்விடங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் எந்தவொரு வலுவானதொரு கட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளும் ரணில் அரசும் தோல்வி கண்டனர். இவ்வாறான ஒரு கட்டமைப்பு சிறிலங்கா சட்டத்திற்கு முரணானதாக இருக்கும் என அப்போது சிங்களச் சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டினர். அதுமட்டுமின்றி அப்படியொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் அதை சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்க வேண்டுமென சில சிங்கள மேலாண்மையாளர்கள் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இவையெல்லாம் ரணில் அரசுக்கு நல்ல சாட்டாகிவிட்டன.
சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பதும் வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவை பற்றியதே. எனவே அதை ஏற்படுத்துவதில் மேற்கூறிய அடிப்படை முட்டுக்கட்டைகள் உண்டாகுவதை எவ்வகையிலும் தடுக்க முடியாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பது வெறுமனே வெளிநாட்டு உதவிப் பணத்தைப் பெறுவது மட்டுமல்ல. அது அடிப்படையில் நிலம் பற்றியதாகும். மக்கள் குடியமரும் இடங்களுக்கு மின்சாரம் நீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பது பற்றியதாகும். இவற்றைவிட மேலாக மேற்படி அலுவல்களைச் செய்வதற்கான அதிகாரம் பற்றியதாகும் இந்த சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயமாகும். சிறிலங்காவின் அரசியல் யாப்பு முற்றாகத் தூக்கியெறியப்படாமல் ஒரு வலுவுள்ள சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எப்படி சாத்தியம் என்பது கேள்விக்குறி. இதனாலேயே சிறிலங்கா அரசு சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் மிக நுட்பமாகப் பம்மாத்து விடத் தொடங்கிவிட்டது. இந்தப் பேய்க்காட்டலுக்கு சொல்ஹெய்மின் வருகைகளும் அறிக்கைகளும் வலுச்சேர்க்கின்றன என்பதுதான் இங்கு மீண்டும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
இதில் இருக்கும் ஒரு பேராபத்தைப் பலரும் கவனிக்கத் தவறுகின்றனர். 1976 இலேயே நாம் தனித் தமிழ் ஈழமே எமது சிக்கலுக்கு ஒரே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அன்று எமக்கிருந்த காரணங்களைவிட இன்று 29 ஆண்டுகள் கழித்து மிக வலுவான காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அப்போதிருந்த அரசியல் ஒருமைப்பாடு வெகுசன எழுச்சி முனைப்பு என்பன இன்று மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிப் போவதை நாம் காண்கிறோம்.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு தீர்வு வரப்போகிறது என ஏற்படுத்தப்படும் எதிர்பார்ப்புகளும் இதில் ஒன்று என்பதுதான் உண்மை. நாங்கள் பேயராக்கப்படுகிறோம் என்ற தன்மான உணர்வு மமக்களிடையே கூர்மையடைந்தமையாலேயே எமது போராட்டம் எழுச்சியடைந்தது. அந்த அரசியல் எழுச்சியும் முனைப்புமே எமது போராட்டம் தடம்புரளாமல் இருக்க உதவின. இவை மழுங்கிப் போகுமாயின் நாம் சலுகைகளுக்காகச் சோரம் போகின்ற கேவலமானதொரு கூட்டாகி விடுவோம். எந்த ஒரு அரசும் அரசியல் ஒருமைப்பாடும் அறிவுமுள்ள ஒரு சமூகத்தை ஏமாற்றும்போது அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் முரண்பாடுகள் கூர்மையடைவது தவிர்க்க முடியாதது. இவ்வாறான முரண்பாடுகள் ஒருகட்டத்தை அடையும்போது அவை தமக்கெதிரான போராட்டங்களாக வெடிக்காமல் இருக்க அரசுகள் பலவழிகளைக் கையாள்கின்றன. அவற்றில் ஒன்று மாய எதிர்பார்ப்புகளை உண்டாக்குவதாகும்.
கருணா குழுவின் சாட்டில் சிறிலங்கா படைகள் கிழக்கில் கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளுமின்றி வடக்கு-கிழக்கில் எமது மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். போர் அழிவுகள் இன்னமும் மாறாது உள்ளன. யாழ்ப்பாணத்தில் தமது காணிகளையும் வீடுகளையும் ஊர்களையும் சிறிலங்கா படைகளிடம் பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் நாதியற்றுக் கிடக்கின்றனர். தமிழ்மொழி புறக்கணிப்பு இன்னமும் தொடர்கிறது. இப்படியே பல இன்னல்களைக் கூறிச் செல்லலாம்.
இவற்றையெல்லாம் விட சுனாமியும் பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றுவரை எதற்கும் தீர்வில்லை. ஆனால் இவையெல்லாம் எமது மக்களிடையே எந்தவிதமான அரசியல் கோபத்தையும் உண்டாக்கவில்லை. இந்த இன்னல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு எதிராக அவர்கள் அணிதிரளவில்லை. திரட்டப்படுவதிலும் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை. யாழ்ப்பாணத்திலோ மன்னாரிலோ வவுனியாவிலோ மட்டக்களப்பிலோ அரசியல் பேரணிகளுக்கு வருகின்ற மக்களின் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது என்பது மறைக்க முடியாத உண்மை. அவர்களிடம் விடுதலை உணர்வு இருக்கின்றது. ஆனால் அது அரசியல் ரீதியாக அணிதிரளும் அளவுக்கு எழுச்சியுள்ளதாக இல்லை.
எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். அவரைப் புலிகள் சந்திக்கிறார்கள். சிரித்துக்கொண்டே கைகுலுக்குகிறார்கள். எல்லாம் சுமூகமாகப் போகிறது என்பதுபோல் மகிழ்ச்சியாகப் பேசுகிறார்கள். இப்படியான செய்தி விம்பங்களை பொதுமக்கள் திரும்பத் திரும்பக் காணும்போது அவர்களை அறியாமல் உளவியல் தாக்கம் ஒன்று ஏற்படுவது இயல்பு.
விரைவில் எமக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்ற உளப்பாங்கை இந்த விம்பங்கள் மக்களிடம் உண்டாக்குகின்றன. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் சொல்ஹெய்மின் கூற்றுக்களும் அமைந்துவிடுகின்றன. இவையெல்லாம் நமது மக்களிடையே எழக்கூடிய அரசியல் சு10ட்சுமங்களைத் தணிக்கின்றன. “ஏதோவொரு தீர்வு அண்மித்துவிட்டது. எனவே நாம் எமதுபாட்டில் இருப்போம்” என்ற அரசியல் மலட்டுத்தனம் அவர்களிடையே பரவுகிறது.
புதிய மக்கள் படை (New Peoples Army-NPA ) என்பது எண்பதுகளில் உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அது போராடி வந்தது. கடந்த பல ஆண்டுகளாக நோர்வேயின் அனுசரணையோடு பிலிப்பைன்ஸ் அரசுடன் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறது. (அமெரிக்காவின் பின்னணியிலேயே நோர்வே அங்கும் அனுசரணையாளராக அமர்த்தப்பட்டது) NPA ஐ ஒரு பயங்கரவாத இயக்கமாக ஏலவே அமெரிக்கா தடைசெய்திருந்தது. அமைதிப் பேச்சுக்களில் குறிப்பிட்ட காலம் ஈடுபட்டு வந்தால் தன்மீதான தடையை அமெரிக்கா நீக்கும் எனவும்ää தனக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமெனவும் npa எதிர்பார்த்திருந்தது. ஆனால் npய இன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த பிலிப்பைன்சின் கிராமப்புற ஏழை மக்களிடம் காணப்பட்ட அரசியல் முனைப்பும் எழுச்சியும் பேச்சுக்கள் நடந்த காலத்தில் படிப்படியாக வீழ்ச்சியடையலாயின. இன்று npய வலுவிழந்த ஒரு அமைப்பாக காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது.
NPA ஐ புலிகளோடு ஒப்பிட முடியாதென சிலர் கூறலாம். படைபலத்தில் புலிகள் NPA ஐ விட பலநூறு மடங்கு வலுவுள்ளவர்களாக இருப்பது உண்மையாயினும் மக்களின் அரசியல் முனைப்பு வீழ்ச்சியடைவது பற்றிய யதார்த்தத்தை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்.
எமது போராட்ட எழுச்சி மக்களிடையே மழுங்கடிக்கப்படாமல் இருக்கவேண்டுமாயின் நாம் சில வேலைகளை செய்தல் நல்லது. முதலாவது நமது கையில் திட்டவட்டமாக எதுவும் கிடைக்கும்வரை நாம் அதுபற்றிய ஊடக ஆரவாரத்தை சற்றேனும் குறைக்கவேண்டும். பிழையான எதிர்பார்ப்புக்களை மக்களிடம் ஏற்படுத்தும் செய்தி விம்பங்களை கூடியளவு தவிர்க்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா அரசு எமக்கு எதையுமே தரப்போவதில்லை என்ற உண்மையை மக்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சொல்ஹெய்ம் வந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் அதை நாம் உரத்துக் கூறவேண்டும்.