தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப் படுவதற்குச் சாத்தியமில்லை: சட்டத்தரணி தவராஜா!

பயங்தரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியமில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

2011ஆம் ஆண்டு அவசரகால ஒழுங்குவிதிகள் நீக்கப்பட்டு விட்டதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் அவசரகால ஒழுங்குவிதிகளில் முக்கியமான சில விதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள் சேர்க்கப்பட்டு அது சட்டமாக்கப்பட்டது.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகள் முழுவதும் ஒரு புதிய சட்டவாக்கத்தின் விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக சில ஏற்பாடுகளையும் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அதன் கீழ் கைது செய்யப்பட்ட எவரும் விடுவிக்கப்படவில்லை. அதேபோன்று தான் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாக்கப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

மேலும் அச்சட்டமானது பிரஜைகளை ஒருவித அச்சமானதும் பதற்றமானதுமான சூழலுக்குள் வைத்திருப்பதற்கே உதவிபுரிகின்றது” என சட்டத்தரணி கே.வி.தவராஜா மேலும் குறிப்பிட்டார்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !