Main Menu

தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லை – அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதேவேளை பிரதமரின் சார்பாக கேள்விக்கு பதிலளித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 12,843 பேர் அரசாங்கத்திடம் சரணடைந்ததாக கூறினார்.

இவ்வாறு சரணடைந்தவர்களும் 600 சிறுவர் போராளிகளும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டனர் என அலி சப்ரி தெரிவித்தார்.

பிரதமர் தெரிவித்ததன் அடிப்படையில் இலங்கையில் எந்த அரசியல் கைதிகளும் இல்லை என்றும் தங்களின் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஏராளமானோர் தடுப்பு காவலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், அவர்களின் வழக்குகளை எவ்வாறு விரைவுபடுத்தலாம் என்பதை அறிய பொது பாதுகாப்பு அமைச்சர், சட்டமா அதிபர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரை தான் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் அவர்களை வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை என்றும், அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆகவே அவர்களுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளை தனித்தனியாக விசாரிக்குமாறு சட்டமா அதிபரிடம் வினவப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.