தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுங்கள் – ஜனநாயக போராளிகள் கட்சி

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலியையும், துயரையும் தமிழ் மக்கள் சுமந்து நிற்கின்ற இந்த மே மாதத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து தர வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் இக்காலத்தில் அதிக சூடு பிடித்து காணப்படுகின்றது. தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழினமுமே பங்கெடுத்து இருந்தது என்பதுதான் உண்மை. அப்படியிருக்க அவ்விடுதலைப் போராட்டத்தின் பெயரால் சில நூற்றுக்கணக்கானோர் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பது அநீதியும், இயற்கை நீதிக்குப் புறம்பான விடயமும் ஆகும்

அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான இளையோர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்தில் கலக்க விடப்பட்டுள்ளனர். இவர்கள் சமூக விரோத குற்றசெயல்களிலோ, வன்முறை நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் வன்முறை அற்ற அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்ததிலும், அதை தொடர்ந்து நிலை நிறுத்தி வைத்திருக்க செய்வதிலும் தமிழர் தரப்பின் பங்களிப்பு மிக காத்திரமானதாகவுள்ளது. இந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் பொதுமன்னிப்பு வழங்குகின்ற அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளது. எனவே நல்லாட்சியின் நாயகரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் அரசியல் கைதி அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி தமிழர் தரப்புக்கு நன்றியையும், நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியுடன் ஒன்றித்து செயற்பட வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலியையும், துயரையும் தமிழ் மக்கள் சுமந்து நிற்கின்ற இந்த மே மாதத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்துக்கான நீதியை ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து வழங்குதல் வேண்டும்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !