தமிழ்மக்கள் வழங்கிய ஆணையை தீர்வுகளைப் பெறுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துங்கள்..

யுத்தத்தில் பலிகொள்ளப்பட்ட தமிழ் மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி எட்டாவது ஆண்டாக நினைவு கூறப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நடைபெற்று முடிந்துள்ளது.

வடமாகாண முதலமைச்சர் விக்கிணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான சம்மந்தனும் கலந்து கொண்டிருந்தார். அவருடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிவமோகன், சார்ள்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரனும் கலந்து கொண்டிருந்தார். வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு உறுப்பினர் ரவிகரன் தலைமையில் அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சம்மந்தன் ஈகைச் சுடரேற்றுவதையும், அஞ்சலி உரையாற்றுவதையும் அங்கு கூடியிருந்த மக்கள் விரும்பவில்லை. மகிந்த ராஜபக்சவால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போது, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்மந்தன் அவர்கள், புலிப் பயங்கரவாதிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, இப்போது இங்கே வந்து அஞ்சலி செலுத்துகின்றீர்களா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதைத் தொடர்ந்து அந்த நிகழ்வின் போக்கு அப்படியே மாறிப்போனது.

சம்மந்தன் உரையாற்றத் தொடங்கியபோது கேட்கப்பட்ட அந்தக் கேள்வியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பை கட்டுப்படுத்துவதற்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் முயற்சி செய்தபோதும் மக்கள் தமது ஆதங்கங்களை கேள்விகளாக சம்மந்தனை நோக்கி கேட்கத் தொடங்கினார்கள்.

அந்தக் கேள்விகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அரசாங்கத்திடம் நீதி கேட்டுப் போராடினோம் அப்போது நீங்கள் வரவில்லை. எமது காணிகளை படையினரிடமிருந்து மீட்டுத் தாருங்கள் என்று போராடினோம் அங்கு நீங்கள் வரவில்லை. அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனப் போராடினோம் அங்கும் நீங்கள் வரவில்லை. இங்கே வந்து அரசியல் பேசுகின்றீர்கள், ஈகைச் சுடர் ஏற்றுகின்றீர்கள் இது நியாயமா? என்று மக்கள் கேள்விகளைக் கேட்டார்கள்.

முதலமைச்சரின் காலில் விழுந்து அழுத மக்கள், ஐயா நீங்கள்தான் எங்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுத்தர வேண்டும், எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிந்து கூறவேண்டும் என்று கதறி அழுதார்கள்.இளைஞர்கள் சிலர் ஆவேசத்துடனும், அழுகையுடனும், அரசியல்வாதிகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றுவதற்கு என்ன தகுதி இருக்கின்றது என்றும், யுத்தத்தில் தமது மூன்று மகன்களை பலிகொடுத்த ஒரு தாய் இங்கே இருக்கின்றார்.

அதுபோல் தமது உறவுகளை இழந்தவர்கள் இங்கே இருக்கின்றார்கள். யுத்தத்தில் அங்கவீனமானவர்கள் இங்கே இருக்கின்றார்கள் அவர்களில் ஒருவரை அழைத்து அந்த ஈகைச் சுடரை ஏற்றச் செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து, போராட்டத்தில் பங்கெடுக்காதவர்களும், போராட்டத்தை வேடிக்கை பார்த்தவர்களும் ஈகைச் சுடரேற்றி இறந்த ஆத்மாக்களை அவமானப்படுத்துகின்றார்கள் என்று கூறினார்கள்.

இவை எல்லாவற்றையும் தாண்டியும் முள்ளிவாய்க்காலில் ஒரு அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அதாவது அன்மைக்காலமாக சம்மந்தன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவந்த சுரேஸ்பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேண்டாதவனாகிப் போய்விட்டதாலேயே இந்தியப் பிரதமர் மோடியை சந்திக்க என்னை அழைக்கவில்லை என்று கூறிய வடக்கு முதலமைச்சர், ஆகிய மூன்று துருவங்கள் ஒரு இடத்தில் சேர்ந்திருக்கின்றார்கள்.

இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் முதலமைச்சரும், சுரேஸ்பிரேமச்சந்திரனும் ஒரே கருத்துக்கொண்டவர்கள். அவர்கள் இருவருக்கும் சம்மந்தன் மீது விமர்சனம் இருக்கின்றது. அது தவிரவும் இந்த ஏற்பாடுகளின் பின்னணியில் செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கஜேந்திரன் பொன்னம்பலம் அணியினரும் அந்தச் சூழலில் சம்மந்தனை நோக்கி கேள்விகளைக் கேட்க சிலரை ஏற்பாடு செய்திருந்ததாகவும், கேள்வி கேட்ட ஊடகவியலாளர் கூட கஜேந்திரனின் வாகனத்திலேயே அவ்விடத்திற்கு ஏற்றிவரப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அங்கு சம்மந்தனை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளையும், கேட்டவர்களையும் நின்றிருந்தவர்கள் அடையாளம் கண்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது, இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வாக இருந்தபோதும், அங்கே தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தியவர்களால், அந்த நிகழ்வு பலரையும் முகம் சுழிக்கச் செய்தது. அரசியல் தீர்வைப் பெற்றுத் தரவில்லை என்றும், காணிகளை மீட்டுத் தரவில்லை என்றும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வித்துத்தரவில்லை என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத்தரவில்லை என்றும் தனியே சம்மந்தனை சுட்டிக்காட்டி கேட்பதால், ஏனையவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.

அக்காரியங்கள் சம்மந்தனால் தனியாக செய்து முடிக்கும் காரியங்களல்ல. அங்கு நின்றிருந்த முதலமைச்சர் விக்கிணேஸ்வரனுக்கும், சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கும், சுமந்திரனுக்கும் அக்காரியத்தில் பங்கு உண்டு. அதைச் சாதிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பொதுவான வேலைத்திட்டம் அவசியம். முதலமைச்சரையும் உள்ளடக்கிய கூட்டமைப்புக்கு தலைவர் என்றவகையில் சம்மந்தனை நோக்கி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதால், அவர் மட்டுமே குற்றவாளியாக கருதப்பட முடியாது.

வடக்கு முதலமைச்சருக்கு இவ்விடயத்தில் சம்மந்தனுடன் இணைந்து செயற்படுவதற்கு பெரும்பங்கு இருக்கின்றது. சம்மந்தனை அவமானப்படுத்துவதன் ஊடாகவோ, அவரை நோக்கி மக்களை கேள்விகளைத் தொடுக்கச் செய்வதன் ஊடாகவோ தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் அரசியல் தலைமைகளிடையே தலைதூக்கியுள்ள இந்த முரண்பாடுகள், சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ்மக்களின் பிரச்சினைகளை தட்டிக்கழித்து நடக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் மகிழ்ச்சியையே கொடுக்கும். சிங்களத் தலைமைகள் செய்ய முற்படுவதை தமிழ் தலைமைகள் செய்வதே கடந்த காலத்திலும் தமிழ் மக்களின் கோரிக்கையையும், போராட்டத்தையும் வலிமை இழக்கச் செய்தது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

முள்ளிவாய்க்காலில் மக்கள் சம்மந்தனை நோக்கி தன்னிச்சையாகவே கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்கள் என்பது உண்மையாக இருக்குமானால், மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கடப்பாடு தமக்கும் இருப்பதை ஏற்றுக்கொண்டு, தமிழ்மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வைக்காண்பதற்கு இனியாவது என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ்த் தலைமைகள் சிந்திக்கவேண்டும்.

தமிழ் இனப்பற்றும், தேசிய உணர்ச்சியும் உண்மையாக தமக்குள் இருக்கும் ஒவ்வொருவரும், தமக்கிடையேயான அரசியல் பேதங்களையும், முரண்பாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பொதுப் பிரச்சினைக்கு தீர்வுகாண எவ்வாறு முயற்சிக்க வெண்டும் என்றும், அதற்கான கூட்டுச் செயற்பாடு எவ்வாறானதாக இருக்க வெண்டும் என்பதையும் பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மையுடன் கலந்துரையாடி முடிவு செய்யவேண்டும்.

ஆதங்கத்துடன் இருந்த மக்கள் முள்ளிவாய்க்காலில் அவ்வாறு கேட்டுவிட்டார்கள் என்றும், மக்கள் அதை மறந்துவிடுவார்கள், தேர்தல் வரும்போது தமிழ்த் தேசியத்திற்காகவே வாக்களிப்பார்கள் என்று யாரேனும் கருதிக்கொண்டு இனியும் அசமந்தமாகச் செயற்படுவார்களேயானால் அவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

நாடாளுமன்றத்தில் சம்மந்தனுக்கு இருப்பதைப்போல், மாகாணசபையில் விக்கிணேஸ்வரனுக்கும், தமிழ்மக்களுக்காக உழைக்கும் கடமையும், பொறுப்பும் இருக்கின்றது. ஒருவருக்கு ஒருவர் கால் தடம் போட்டு, ஒருவர் விழுவதைப் பார்த்து மற்றவர் சிரிக்கும் தருணமல்ல. தமிழ்மக்கள் வழங்கியிருக்கும் அரசியல் ஆணையை பிரச்சனைகளின் தீர்வுக்காக உசச்பட்சமாக பிரயோகிக்க வேண்டிய தருணமாகும்.

-ஈழத்துக்கதிரவன்-


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !