“ தமிழ்த்தாத்தா “ (உ..வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் நினைவுக்கவி)

பத்தொன்பதாம் நூற்றாண்டு
இலக்கிய வரலாற்றில்
தடம் பதித்த தமிழ்த்தாத்தா
மாசித் திங்கள் பத்தொன்பதில்
தமிழ் நாட்டில் பிறந்து
தமிழ்த் தொண்டு ஆற்றி
தமிழ் அன்னைக்கு அணி சேர்த்து
தமிழின் பெருமையையும்
தமிழனின் பெருமையையும்
நிலைநாட்டி தலைநிமிரச் செய்தாரே !

தமிழின் மீது கொண்ட காதலும்
தமிழ்ப் புலமையும்
தமிழ் அறிஞர்களிடம் கற்ற கல்வியும்
சிந்தனைத் தெளிவும் விடாமுயற்சியும்
தமிழ்த்தாத்தா ஆக்கியதே சாமிநாத ஐயரை !

ஏடுகளில் எழுத்தாணியால் எழுதி
ஏடுகளைப் படித்து தேறி
தமிழ் ஆசானாயும் பணியாற்றி
சென்னை மாநிலக் கல்லூரியின்
தமிழ்ப் பேராசிரியரும் ஆனாரே !

ஏடுகளை எல்லாம்
தேடித் தேடி தூசி தட்டி
சேர்த்து தொகுத்து
அச்சுப் பதித்து
புத்தகங்களாகத் தொகுத்தாரே !

பழந்தமிழ் பேசும்
சங்க இலக்கியங்களையும்
ஐம்பெரும் காப்பியங்களையும்
ஓலைச் சுவடிகளில் இருந்து
தேடிப் பெற்று பதிப்பித்து
புத்தகங்களாக படைத்தாரே !

தமிழ் அன்னைக்கு மகுடம் சூட்டி
உரைநடை வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி
தமிழில் சரிதம் சுயசரிதம் என்ற வடிவங்களை
அறிமுகப்படுத்தி நூல்கள் பல பதிப்பித்து
பழந்தமிழ் கருவூலங்களைப் பேணி
இலக்கிய உலகின் இமயமாய் வாழ்ந்தாரே !

தமிழுக்காகவே வாழ்ந்த இவரின் பெருவாழ்வு
தமிழுக்கு புகழைக் கொடுத்ததே
தமிழ் என்ற பரந்த வானம்
தமிழ்த்தாத்தாவின் வசமாகியதே
தமிழ் கூறும் நல்லுலகம்
தமிழ்த்தாத்தாவை என்றும் நினைவு கூருமே !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 19,02,2019« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !