தமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படும்வரை தீர்வு கிடைக்காது: சிவாஜிலிங்கம்

”நாங்கள் ஆளுகின்ற இனம், தமிழர்கள் சிறுபான்மை இனத்தவர்கள். அவர்கள் ஆளப்படுகின்ற இனம் என சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது” என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தமிழ்த்தேசிய இனம் எழுந்து நின்றால் மாத்திரமே தங்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற, ஊடகவியலாளர் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

இதுவரை கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைத்தால் மாத்திரமே இருக்கின்ற ஊடகவியலாளர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்றும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். இன ஐக்கியம், தேசிய நல்லிணக்கம் என்பற்றிற்கும் அதுவே வழிவகுக்குமென அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலை உள்ளிட்ட சகல விடயங்களுக்கும் உண்மை வெளிகொணரப்பட்டால் மாத்திரமே நேர்மையான, நீதியான ஆட்சி இடம்பெறுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார். அதுவரை வெறும் ஏமாற்று நாடகமே நடைபெறுகின்றது என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்கள் என சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !