தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய அனைத்து தரப்பிற்கும் கூட்டமைப்பு அழைப்பு !
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது,
அதன்படி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு மூலம் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுவது குறித்து பேசப்படவுள்ளது.
கட்சிகளுக்கிடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை வெளிப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு முன்னர் வெளிநாட்டுகளின் தலையீடுகள் இன்றி சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்காக கலந்துரையாடலை மேற்கொள்ள அனைத்து தமிழ் தலைவர்களுக்கும் கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாகக் கலந்துரையாடப்படவுள்ளது என்றும் புதிய அரசியலமைப்பின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.