தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் சுற்றுலாத்துறைக்காக சுவீகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை சுற்றுலா துறைக்கு என சுவீகரிக்காமல் உரியமுறையில் அதனை தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும் என சர்வதேச இந்து மதகுருமார் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு கீரிமலை, நகுலேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறும் அந்த ஒன்றியத்தின் தலைவர் பண்டிதர் கலாநிதி து.கு.ஜெகதீஸ்வர குருக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
கீரிமலை காங்கேசன்துறையில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயில், சடையம்மா சமாதி, சங்கர சுப்பையா சமாதி, சித்தர்கள் சமாதிகள், சிவன் கோயில் என வழிபாட்டிடங்கள் அமைந்துள்ள சைவ தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை சுற்றுலா துறைக்கு என சுவீகரிக்காமல் உரியமுறையில் அதனை தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சமய நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் ஒருமித்த நிலையில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இந்து சமய கலாச்சார அமைச்சும் பொறுப்புடன் செயற்பட்டு தமிழ் மக்களின் வணக்கஸ்தலங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இதற்காக தமிழ் தலைமைகளும் குரல் கொடுப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் இந்து மத குருமார் ஒன்றியத்தின் தலைவர் பண்டிதர் கலாநிதி து.கு.ஜெகதீஸ்வர குருக்கள் தெரிவித்துள்ளார்.