தமிழர்களின் சந்ததியாக வழிவந்த பல அடையாளங்கள் விலகுகின்றன

எமது வாழ்வியல் அடையாளங்கள் இன்று எம்மைவிட்டுத் தூர விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. மேலைத்தேய கலாசாரங்களை நாம் பின்பற்றத் தொடங்கியதாலும், எமது சந்ததி வழிவந்த அடையாளங்களை நாம் தொலைக்க முற்பட்டதாலும் இந்த நிலை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழர் மரபுரிமைகள் நிலையம் யாழ்ப்பாணம் செம்மணி வீதியிலுள்ள நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலையிலும், தமிழர் நாகரிக மையம் முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு அம்பாள்புரம் மாங்குளம் மல்லாவி முதன்மை வீதியிலும் அமைக்கப்பட்டு நேற்றுத் திறந்து வைக்கப்பட்டன. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவற்றை  ஒழுங்கமைத்தது அமைத்திருந்தன.

இரண்டு நிகழ்வுகளிலும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலையில் நடந்த திறப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னோர்களின் பயன்பாட்டுப் பொருள்களான அம்மி, ஆட்டுக்கல், திருகை, பித்தளைக்குடம், மூக்குப் பேணி, மண்ணெண்ணெய் விளக்குகள் தற்காலச் சந்ததியினருக்குப் பெயரளவில் கூடத் தெரியாததாகிவிட்டன.

பண்டைய இலக்கியங்கள், ஏட்டுச் சுவடிகளில் மட்டுமன்றி சில கிராமப்புறங்களிலும் எமது மரபுரிமை அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலேயே இவை உருவாக்கப்பட்டுள்ளன. மக்களின் பாவனையில் இருந்துவந்த பாக்குவெட்டி, துலா, கருங்கல் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பொருள்கள் அறிவியல் வளர்ந்திராத காலத்திலேயே நெம்புகோல் தத்துவம், சில்லும் அச்சாணியும் போன்ற விஞ்ஞான அறிவியல் தத்துவங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்திருந்தன என்று இன்றைய விஞ்ஞானிகள் கூறி வியக்கின்றனர்.

கூசாவில் தண்ணீர் வைத்துக் குளிர்ந்த சுத்தமான நீரைத் தாகம் தீரும் வரை முன்னோர்கள் அருந்தினர். நாமோ குளிர்சாதனப் பெட்டியில் நீரை வைத்து கடுமையான குளிர் நீரை அருந்துகின்றோம். விளைவு விரைவாகவே பற்கள் பழுதடைகின்றன. உடம்பில் சளி அதிகரிக்கின்றது.

அந்தக்காலத்தில் மதிய, காலை, மாலை உணவுகளை இன்னோர் இடத்துக்கு எடுத்துச் சென்று உண்ண வேண்டிய தேவைகள் ஏற்பட்ட போது சிறிய அழகான ஓலைப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைப் பெட்டியில் உணவை எடுத்துச் சென்றபோது உணவு பழுதடைகின்ற தன்மை தவிர்க்கப்பட்டது என்று இன்றைய விஞ்ஞானி கூறுகின்றான்.

நீர்ப்பற்று எதுவும் இன்றி உடன் சமைத்த உணவு போல் மிகவும் காத்திரமாக அந்த உணவு காணப்படுகின்றது என்று கூறுகின்றார்கள். பனை ஓலையில் இருக்கும் சில தாதுப் பொருள்களும் உணவுடன் சேர்ந்து அந்த உணவுக்கு  மேலதிக சுவையை வழங்குகின்றது என்றும் கூறுகின்றார்கள்.

தற்போது மருத்துவர்களும் மருந்தகத்தினரும்தான் நன்றாக உழைக்கின்றார்கள்!

தேநீரில் செப்பு நாணயம்

இன்று பித்தளை மூக்குப் பேணியில் தேநீர் அருந்துவது நாகரீகம் இல்லை. ஆனால் மேலைத்தேயத்தவர்களோ செப்புப் பாத்திரத்தில் தேநீர் அருந்த விரும்புகின்றார்கள் அல்லது தேநீருக்குள் ஒரு செப்பு நாணயத்தை இட்டு அருந்துகின்றார்கள். அதிலே விஞ்ஞான நன்மைகளைக் கண்டுள்ளார்கள்.

மூக்குப் பேணிகளில்

குடிப்பது தனிசுகம்

அந்தக் காலத்தில் மூக்குப் பேணிகளில் தேநீரை அண்ணாந்து குடிப்பது தனி சுகம் மட்டுமல்ல சுகாதாரமும் கூட. அந்த சுகத்தை இன்றைய சந்ததியினர் சந்திக்கவில்லை.

கோப்பைகளில் உணவு உண்பதைவிட வாழை இலை, தாமரை இலை ஆகியவற்றில் உணவிட்டு உண்ணும்போது சுவை அதிகம். ஆட்டுக்கல்லில் அரைத்த உழுத்தம் மாவில் சுட்ட வடை தனிச் சுவை. அம்மியில் அரைத்த இஞ்சி சேர்த்த சம்பல் இருந்தால் எத்தனை இடியப்பத்தையும் வரிசையாக உள்ளே தள்ளலாம். இவைகள் எல்லாம் எமது மூதாதையர்கள் எமக்கு அறிமுகப்படுத்திய சுகாதாரத்துடன் கூடிய பழக்கவழக்கங்கள்.

வாழ்க்கை மாற்றம் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டியதொரு நிகழ்வு. பால்ய வயது வாழ்க்கைக்கு மாறுங்கள் என்று கூறவில்லை. எமது அடிகளைத் துருவி ஆராய்வதிலும் அவற்றில் காணும் தொழில்நுட்பச் சிறப்பைப் பங்கிட்டுக் கொள்வதிலும் நன்மைகள் இருக்கின்றன.

பாரம்பரிய மருத்துவமே

இன்றும் சிறந்ததாகவுள்ளது

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகள்கூட இன்று உலகளாவிய ரீதியில் மிகப் பெரிய செல்வாக்கைப் பெற்று விளங்குவது சிறப்பிற்குரியது. எதுவித பக்க விளைவுகளும் இன்றி மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளக்கூடிய எமது மூலிகை மருத்துவ முறைமைகள் மேற்கு நாட்டு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் சுதேச வைத்தியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் படையெடுக்கின்றார்கள்.

பன்னாடுகளிலிருந்து வரும்

மாத்திரைகளில் இரசாயனம்

எம்மைச் சுற்றி இருக்கின்ற மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகைகள் பற்றி நாம் எதுவுமே அறியாது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரசாயன மாத்திரைகளையே உட்கொண்டு வருகின்றோம். நான் கூட அதைத் தான் செய்கின்றேன். காரணம் விரைவில் குணமடைய வேண்டும் என்ற வேகமும் ஆர்வமும். பக்க விளைவுகள் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இது பாரதூரமானது – என்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !