தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் தைத்திருநாளாக அமையட்டும்: ஜனாதிபதி வாழ்த்து!

தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் இனிய தைத்திருநாளாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்று தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடிவரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என மகாகவி பாரதி பாடியதிலிருந்து தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமை அளித்துள்ளனர் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.

விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையையே அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதையும் இது புலப்படுத்துகின்றது.

அத்தோடு வாழ்வின் ஆதாரமான விவசாயத்திற்கு நீர், ஒளி, வெப்பம், காற்று ஆகியவற்றை உருவாக்க உதவிவரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் பண்டுதொட்டு கொண்டாடிவரும் தைப்பொங்கல் தினத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

பால் பொங்கி வழிவதைப் போல் அனைவரது உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகிப் பிரவாகித்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே தமிழ் மக்கள், தமது விளைச்சலினால் பெற்றுக்கொண்ட புத்தரிசி மற்றும் தானியங்களோடு தூய பாலும் சர்க்கரையும் கலந்து பொங்கி மகிழ்கின்றனர்.

பல இன, மத, கலாசார சமூகத்தைக் கொண்ட எமது நாட்டின் கலாசார பன்மைத்துவத்தின் செழுமைக்கு இத்தகைய பண்டிகைகள் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்பதே எனது நம்பிக்கையாகும்.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்துவரும் உறுதியான நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை கைக்கூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான வலிமையான உறவினை மென்மேலும் மெருகூட்டும் வகையிலும் தமிழ் கலை, கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையிலும் தைத்திருநாளைக் கொண்டாடி மகிழும் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !