தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
மீனவர்களின் மீன்பிடித்தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 23 தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் மீனவர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். உடனடியாக மீனவர்களை மீட்க மீனவக் குடும்பங்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
சமீபத்தில் இந்தியா, இலங்கை அரசுடன் தமிழக மீனவர்கள் பிரச்சனை சம்பந்தமாக இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் குறித்தும், நல்ல தீர்வு காணவும் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனாலும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு இன்னும் நல்ல தீர்வு ஏற்படவில்லை.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு மீனவச் சமுதாயம் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தில் உள்ளது. எனவே மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும்.
மேலும் மத்திய அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை முறியடிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.