தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும்- கே.எஸ்.அழகிரி
காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடைக்கானலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முடிவு செய்வது விஞ்ஞானிகளே. அதில் அரசியல் கட்சிகள் கருத்து கூறுவது ஏற்புடையதல்ல. காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு 9.2 டி.எம்.சி தண்ணீரை ஜூன் மாதத்திற்குள் கர்நாடக அரசு வழங்கவேண்டும். ஆனால் வழங்காமல் இருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. காவேரி மேலாண்மை வாரியம் சொன்ன பிறகு கட்சியினருடன் ஆலோசனை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரை வழங்கினால் மட்டுமே குருவை சாகுபடி செய்ய முடியும்.
அ.தி.மு.க அரசு மத்திய அரசிற்கு மாற்று கருத்தை சொல்ல அஞ்சுகிறது. மும்மொழி கொள்கையை கொண்டுவர பா.ஜனதா சொல்கிறது. மூன்றாவது மொழி படிக்க கூடாது என்பது நோக்கமல்ல. மாணவர்கள் பாதிக்கக் கூடாது. நரசிம்மராவ் அவர்களுக்கு 16 மொழிகள் தெரியும். ஆனால் அவர் எந்த கல்லூரியிலும் பயிலவில்லை. மாணவப்பருவத்திற்கு பிறகே கற்றுக்கொண்டார்.
இந்தி பேசாத மக்கள் அவர்கள் விரும்பாதவரை திணிப்பு என்பது கூடாது என பாராளுமன்றத்தில் சட்டப்பாதுகாப்பு உள்ளது. இதை பாரதிய ஜனதா மனதில் கொள்ளவேண்டும்.
பா.ஜனதா ஒரே மொழி ,ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என சொல்வது சர்வாதிகாரம். இது பன்முக நாடு. எனவே மோடி அரசு இந்த கட்டாயத்தை கொண்டுவர கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.