தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிப்பு- முதல்வர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 14-ந்தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி.சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
மளிகைக் கடைகள் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் 31 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உபேர் ஸ்விக்கி, உள்ளிட்ட ஆன் லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு தடை தொடர்கிறது. ஊரடங்கால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாததால் பண வசூலை உடனே நிறுத்தி வைக்க வேண்டும். கால் நடை, கோழி, மீன், முட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கு தடையில்லை.
சந்தைகளில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் விசாலமான இடங்களில் கடைகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறி பழ வகைகளை விற்கும் போது 3 அடி தூரம் மக்களிடையே இடைவெளி இருக்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருட்களை வாங்க வேண்டும்.
தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,
கர்ப்பிணி பெண்கள் நீரிழிவு காசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கிரிக்கெட் , சந்தையில் மக்கள் கூடுவதை தவரிக்க பெரிய இடங்கள் மைதானங்களில் காய்கறிகள் விற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.