Main Menu

தனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி

‘லோன் வுல்ப்’ எனப்படும் தனி மனித தீவிரவாதத் தாக்குதல் கூட இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்தும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய நிலைமையில் தீவிரவாதம் இலங்கையில் நீடித்திருப்பதற்கான அடையாளம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இது முற்றிலுமாக அழிந்து விட்டதாகக் கூறமுடியாது என்றும் கூறினார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இன்று (புதன்கிழமை) சாட்சியம் வழங்கியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் குண்டுத் தாக்குதலொன்று இடம்பெற்றதையடுத்து, இலங்கை இராணுவத் தளபதி என்ற வகையில் நான் பாதுகாப்பு விடயங்களை தீவிரப்படுத்தினேன்.

எனது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையிலான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டிருந்தேன். 26ஆம் திகதி, இஷான் அகமட் என்பவரை நாம் தெஹிவளையில் வைத்து கைது செய்திருந்தோம்.

அப்போது, அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் எனக்கு அழைப்பினை மேற்கொண்டிருந்தார். அவர் குறித்த நபரை கைது செய்தீர்களா என என்னிடம் கேட்டார். அதற்கு நான் தெரியாது என்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளமையால் குறிப்பிட்டு யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறினேன்.

பின்னர் இரண்டாவது முறையாக எனக்கு அழைப்பை ஏற்படுத்தியபோது, இன்னும் நான் இதுகுறித்து தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தேன்.

இதையடுத்து, இராணுவப் புலனாய்வுப் பிரிவிடம் நான் இதுகுறித்து கேட்டபோது, குறித்த பெயர் கொண்டவரை கைது செய்துள்ளதாக அவர்கள் கூறினார்கள்.

அதன்பின்னர், மீண்டும் ரிஷாட் பதியுதீன் எனக்கு அழைப்பினை ஏற்படுத்தியபோது, அவ்வாறான ஒருவரை கைது செய்துள்ளோம் என்று கூறினேன்.

எனது அதிகாரத்திற்கு இணங்க, இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஒருரை 24 மணிநேரங்களுக்குள் பொலிஸில் ஒப்படைக்க வேண்டும். எனினும், அமைச்சர் ஒருபோதும் குறித்த நபரை விடுவிக்க வேண்டும் என என்னிடம் கூறவில்லை.

மாறாக, தன்னிடம் வேலைப் பார்க்கும் உயர் அதிகாரியொருவரின் மகன் தான் கைதானவர் என்றும், இந்த விடயம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக சற்று ஆராய்ந்து பார்க்குமாறுமே என்னிடம் கூறியிருந்தார்.

இதுதவிர எந்தவொரு அரசியல்வாதியும் உயர் அதிகாரியும் என்னிடம் கதைக்கவில்லை. இப்போதுவரை எனது செயற்பாட்டை மேற்கொள்ள எந்தவொரு தரப்பும் அழுத்தம் விடுக்கவில்லை.

நாம் தற்போது சர்வதேச தீவிரவாதத்துக்கே முகங்கொடுத்துள்ளோம். தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையானது, நாம் கடந்த காலங்களில் மேற்கொண்டது போல் அல்லாது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது.

எனினும், இந்த தீவிரவாதம் தொடர்ந்தும் எமது நாட்டில் இருப்பதற்கான அடையாளங்கள் இப்போதுவரை இல்லை. முப்படையினர் மற்றும் பொலிஸார் என அனைவரும், இது மேலும் தீவிரமடைவதை தடுக்கும் செயற்பாட்டில் மும்முரமாக தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால், இந்த அச்சுறுத்தல் முழுமையாக இல்லை என்று கூறமுடியாது. இதனால்தான் அவசரகால சட்டத்தை நாம் இன்னும் ஒருமாத காலத்திற்கு நீடித்துள்ளோம். புலனாய்வுப் பிரிவு கடந்த காலங்களில் சக்திமிக்கதாக இருந்த காரணத்தினால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமாக இருந்தது.

எனினும், கடந்த 10 வருடங்களாக இது சற்று பலவீனமான நிலையில்தான் இருந்தது. இதனை நாம் இவ்வாறே விட்டுவிட முடியாது. இராணுவம் என்ற வகையில், சில செயற்பாடுகளை நாம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம் என்றுதான் கூறவேண்டும். கைது செய்யப்பட்டவர்கள், அவர்களிமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களை வைத்தே நாம் இவ்வாறு கூறுகிறோம்.

ஆனால், எப்போது வேண்டுமானாலும் ‘ஓநாய் தாக்குதல்’ போன்ற ஒன்று நடைபெறலாம். இதனால்தான் நாம் தற்போது கூட பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டு வருகிறோம். இந்த அச்சுறுத்தல் 100வீதம் இல்லாது போய்விட்டது என்றோ, அனைத்து தீவிரவாதிகளும் இல்லாது போய்விட்டார்கள் என்றோ நாம் என்றும் கூற முடியாது.

தீவிரவாதம் என்பதை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை நாம் அறிவோம். தீவிரவாத அச்சுறுத்தல் என்பது ஆயுதத்தால் மட்டுமே மேற்கொள்ளப்படும் ஒன்றல்ல. வாகனம், நீர், கத்தி, நெருப்பு என எந்தவகையிலும் தாக்குதல் நடத்தப்படலாம். இதனைத்தான் ‘ஓநாய் தாக்குதல்’ என்கிறோம்.

இது எல்லா நாடுகளுக்கும் உள்ள பொதுவான ஒரு அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது. எனினும், நாம் தொடர்ந்தும் புலனாய்வுப் பிரிவையும் பாதுகாப்புக் கட்டமைப்பையும் பலப்படுத்தியே இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

பகிரவும்...