தனித்து ஆட்சியமைக்கவே விரும்புகிறோம்! – நளின் பண்டார

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளதென பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சராக, நளின் பண்டார இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களின் வெற்றிடத்திற்கே நாம் நியமிக்கப்பட்டுள்ளோம். புதிதாக ஒரு அமைச்சுக்கூட உருவாக்கப்படவில்லை. எனினும், சில ஊடகங்கள் இதனை தவறாக சித்தரிக்கின்றன.

ஜனாதிபதியும் பிரதமரும் சிறப்பாக செயற்பட்டே இந்த நியமனங்களை தற்போது வழங்கியுள்ளனர். இதனூடாக சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது. அத்தோடு, கடந்த காலத்தில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், அனைவருடனும் கலந்தாலோசித்தே இந்த பதவிகளை வழங்கியுள்ளோம் என்பதையும் கூறிக்கொள்ள வேண்டும். இதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. பதவி கொடுத்தாலும் இல்லையென்றாலும் நாம் மக்களுக்கான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்போம். மக்கள் சேவைக்கு பதவிகள் அவசியமில்லை.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டுமென்பது கட்சியின் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனினும், எஞ்சியுள்ள ஒன்றரை வருட காலத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து எமது செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் பல முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !