ட்ரம்ப் உரையாற்றும்போது உறங்கிய சிறுவன் : இணையத்தில் பரபரப்பாகும் படம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உரையின்போது உறங்கிக்கொண்டிருந்த ஜோசுவா என்ற சிறுவன் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

இந்தப் படத்தைப் பார்த்து குறித்த சிறுவனுக்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் உரைநிகழ்த்துவது வழக்கம். அவ்வாறு நேற்று (புதன்கிழமை) அவர் உரையாற்றும் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அமெரிக்க பள்ளி ஒன்றில் ஜோசுவா ட்ரம்ப் என்ற 11 வயது சிறுவன் படித்து வருகிறான். அமெரிக்க அதிபரின் பெயர் இந்தச் சிறுவனுக்கும் சூட்டப்பட்டிருந்ததால் சிறுவனை சக மாணவர்கள் கிண்டலடித்து வந்தனர்.

இதனால் சிறுவன், கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இப்பிரச்சினையால் அந்தச் சிறுவனையே பள்ளிநிர்வாகம் நீக்கப்போவதாக அறிவித்தது.

இச்சிறுவனின் விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியதும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கவனத்துக்கும் சென்றது.

அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் உரைநிகழ்த்துவது வழக்கம். இதில் அதிபர் தரப்பிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாக ட்ரம்ப் தனது மனைவி உட்பட 13 பேரை அழைத்திருந்தார். அதில், சிறுவன் ஜோசுவா ட்ரம்பும் ஒருவன்.

சக மாணவர்களின் கேலி, கிண்டலால் பாதிக்கப்பட்டிருந்த அவனை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் சிறுவனை ட்ரம்ப் அழைத்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் தீவிரமாக உரைநிகழ்த்திக் கொண்டிருந்தார். ஆனால், அந்தச் சிறுவன் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. தனது இருக்கையில் அமர்ந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில், இந்தப் படம் ஊடகங்களில் வெளியாகிய சமூக வலைத்தளங்களிலும் பரவியுள்ளது.

ட்ரம்ப் உரையில் எதுவும் இல்லாததால் சிறுவன் உறங்கிவிட்டான் எனவும், ட்ரம்பின் உரையின்போது உறங்கியதற்காக அந்தச் சிறுவனுக்கு பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விடயம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !