டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்கள்- பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள, டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

வாரந்தோறும் சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த வாரத்திற்கான டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லியும், பந்து வீச்சு தரவரிசையில் கார்கிஸோ ரபாடாவும் முதல் நிலை வீரர்கள் என்ற பெருமையுடன் ஆண்டை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளனர்.

முதலில் நாம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம்…

இதில் முதல் ஆறு இடங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. இதற்கமைய இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லி, 937 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். கோஹ்லி, கடந்த 135 நாட்களாக முதலிடத்தில் இருந்து வருகிறார்.

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 897 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 883 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக இந்தியாவின் புஜாராவுக்கு, 18 புள்ளிகள் கூடுதலாக கிடைத்த போதிலும் அவரது வரிசையில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில், நான்காவது இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 807 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

அவுஸ்ரேலியாவின் டேவிட் வோர்னர் 780 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார். இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சதங்கள் விளாசிய நியூசிலாந்து அணியின் ஹென்றி நிகோல்ஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 763 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்காவின் டீன் எல்கர், ஒரு இடம் முன்னேறி 728 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் திமுத் கருணாரத்ன, இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு 715 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் அசார் அலி 697 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.

……………..

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்னாபிரிக்காவின் கார்கிஸோ ரபாடா 880 புள்ளிகளுடனும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் எண்டர்சன் 874 புள்ளிகளுடனும் மாற்றமின்றி முதல் இரு இடங்களில் நீடிக்கின்றனர்.

மெல்பேர்னில் நடைபெற்ற இந்தியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் 836 புள்ளிகளுடன், 5 இடங்கள் ஏற்றம் கண்டு 3ஆவது இடத்தை வசப்படுத்தியுள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும்.

தென்னாபிரிக்காவின் வெர்ரோன் பிளெண்டர் 817 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் மொஹமட் அப்பாஸ் 813 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 796 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், உள்ளனர்.

இலங்கை அணிக்கெதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை நிலைகுலைய வைத்த டிரென்ட் போல்ட் 14ஆவது இடத்தில் இருந்து 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவின் அஸ்வின் 770 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார். மற்றொரு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுத்தீ இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். விண்டிஸ் அணியின் ஜேஸன் ஹோல்டர் 751 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !