டெல்லியில் ஜெர்மனி நாட்டு பிரஜைக்கு கத்திக்குத்து – இருவர் கைது

தெற்கு டெல்லியில் உள்ள கோட்வாலியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெஞ்சமின் ஸ்கோல்ட் என்பவர்  நேற்றிரவு கீதா காலணி என்ற இடத்தின் அருகே வரும் போது ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவரால் கத்தியால் குத்தி, வழிப்பறிக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஜெர்மன் நாட்டு பிரஜைக்கு நேர்ந்த இந்த தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய ரிஸ்வான் மற்றும் ராஜ்கிஷோர் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 9000 ரூபாய் ரொக்கம், செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரின் விரைவு நடவடிக்கைக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் மூலம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரிஸ்வான் மீது ஏற்கனவே சில குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர் தான் என்றும் முன்னதாக இருமுறை இவரை உத்திரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !