ஜே.வி.பி நினைவு தினம் அனுஷ்டிக்க அனுமதிக்கும் போது புலிகளை நினைவு கூருவதில் என்ன தவறு? – அமைச்சர் ராஜித

வடமாகாண சபையால் எதிர்வரும் 18ம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், அங்கு கொலை செய்யப்பட்டவர்கள் எமது மக்களே என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டது பயங்கரவாதிகள் மட்டுமல்ல என்றும், பயங்கரவாதிகளை மாத்திரம் கொலை செய்த இராணுவம் உலகில் எங்கும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதே வேளை வீடுகளுக்குள் புகுந்து மக்களை மிகக் கொடூரமாகக் கொன்று குவித்த ஜேவிபியினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது, பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட அமைப்பு எனவும், ஆனால் ஜேவிபியினர் அவ்வாறு இல்லை என தெரிவித்த ஊடகவியலாளர் தரப்பினர், சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பினரையும், அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனையும் நினைவு கூர, எவ்வாறு அனுமதிக்க முடியும். இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா ? என்ற கேள்விகளை முன்வைத்தனர்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நமது நாட்டில் நிலவியது உள்நாட்டு யுத்தம். வடக்கில் உயிரிழந்தவர்களும், தெற்கில் உயிரிழந்தவர்களும் எமது பிள்ளைகளே.
ஜே.வி.பி.-யும் அக்காலப்பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே விளங்கியது. அவ்வாறாயின் அதுவும் ஒரு பயங்கரவாத அமைப்பே. அவர்களை நினைவுதினம் அனுஷ்டிக்க அனுமதிக்கும்போது புலிகளை நினைவு கூருவதில் என்ன தவறு?
புலிகள் எமக்கு பயங்கரவாதிகளாக தோன்றினாலும், வடக்கு மக்கள் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர். அவ்வாறானவர்கள் தமது உறவுகளை நினைவுகூருவதில் தவறில்லை” எனத் தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இராணுவத்தினரால் பயங்கரவாதிகளே கொல்லப்பட்டதாக ஊடகவியலாளர்கள் வாதம் முன்வைக்க அதற்கு பதிலளித்த அமைச்சர், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் பயங்கரவாதிகள் மாத்திரமல்ல பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது நான் மட்டுமல்ல. பலரும் அறிந்த உண்மை எனத் தெரிவித்த ராஜித, அவ்வாறாயின் 1988 கலவரத்தில் உயிரிழந்த அனைவரும் ஜே.வி.பி. பயங்கரவாதிகளா என்றும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் ஜேவிபி சிங்களவர்கள், புலிகள் தமிழர்கள் என்பதுதான் உங்கள் பிரச்சினையா என கேள்வி எழுப்பியதுடன், ஜே.வி.பி.-இன் தலைவர் விஜயவீரவிற்கும், பிரபாகரனுக்கும் இடையிலான வித்தியாசத்தை கூறுங்கள் என ஊடகவியலாளர்களைப் பார்த்து கேட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !