Main Menu

ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம்

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன், முதலிடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் 11ஆவது சுற்றான ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று நேற்று ஹாக்கென்ஹெய்ம்ரிங்  ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 306.458 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன் பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 44 நிமிடங்கள் 31.275 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

நடப்பு தொடரில், மேக்ஸ் வெர்ஸ்டபேன் பெற்றுக் கொண்ட இரண்டாவது வெற்றி இதுவாகும். அத்தோடு, இவ்வெற்றிக்காக வெர்ஸ்டபேனுக்கு முதலிடத்திற்காக வழங்கப்படும் 26 புள்ளிகள் வழங்கப்பட்டன.

அவரை விட 7.333 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, பெர்ராரி அணியின் செபஸ்டியன் வெட்டல், இரண்டாவது இடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 18 புள்ளிகள் வழங்கப்பட்டன.

8.305 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த டோரோ ரோஸ்சோ, அணியின் வீரரான டேனியல் க்வியாட்  மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11 சுற்றுகள் முடிவில், இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் 225 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இவரை தொடர்ந்து, மற்றொரு மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டேரி பாட்டாஸ் 184 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன்162 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த 12ஆவது சுற்றான ஹங்கேரியன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி, ஹங்கரோரிங்  ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.