ஜேர்மனி- நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு பின்னர், மீண்டும் இரசிர்களை குதுகலப்படுத்திவரும் யு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், தற்போது நடைபெற்றுவரும் ஐந்தாவது கட்ட போட்டிகளில், நேற்று நடைபெற்ற போட்டி இரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஆம்! ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
லீக் ஏ- குழு ஓன்றில் நடைபெற்ற இப்போட்டியானது, ஜேர்மனியில் அமைந்துள்ள வெல்டின்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம்…
இரசிகர்களின் உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். போட்டியின் 9ஆவது நிமிடத்தில், ஜேர்மனி அணியின் டைமோ வெர்னர் முதல் கோலை அடித்து இரசிகர்களை பரவசப்படுத்தினார்.
இதனைதொடர்ந்து, உற்சாகத்துடன் களத்தில் பம்பரமாய் சுழன்ற ஜேர்மனி வீரர்கள், 20ஆவது நிமிடத்தில் லெராய் ஸேனின் துணையுடன் இரண்டாவது கோலை புகுத்தியது.
இதனால் ஜேர்மனி அணி, முற்பாதியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில், நெதர்லாந்து அணியினரின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.
போட்டியின் 85ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் க்வின்சி ப்ரோமெஸ் ஒரு கோல் அடித்தார். இதனைதொடர்ந்து, அணியின் இன்னொரு வீரரான விர்கில் வான் டிஜெக், மேலதிக நேரமான 91ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடிக்க கோல்கள் கணக்கு 2-2 என சமநிலைப் பெற்றது.
மேற்கொண்டு இரு அணி வீரர்களால் முயற்சித்தும் முன்னிலை கோலை புகுத்த முடியவில்லை. ஆகையால் இறுதியில் போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.