ஜேர்மனியில் சட்ட விரோதக் குடியேற்ற வாசிகளின் முகாம் முற்றுகை

ஜேர்மனியில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தங்கியிருந்த முகாமொன்றில் கலவரம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அம்முகாமை பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) முற்றுகையிட்டுள்ளனர்.
இம்முகாமில் தங்கியிருந்த 23 வயதுடைய ஒருவரை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நாடு கடத்த முற்பட்டபோது, பொலிஸாருக்கும் முகாமிலிருந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்குமிடையில் கலவரம் ஏற்பட்டது. இதன்போது, சுமார் 150 குடியேற்றவாசிகள் தம்முடன் கலவரத்தில் ஈடுபட்டதுடன், அவர்கள் பொலிஸாரின் கார்களைச் சேதப்படுத்தியதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணையை முன்னெடுக்கும் நோக்கில், முகாமில் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.
ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் இம்முகாமில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து ஜேர்மனிக்கு 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் வந்துள்ளதுடன், இவர்களினால் தமது நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அந்நாட்டு அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.