ஜேர்மனியின் மிக ஆபத்தான நகரம் ப்ராங்க்பர்ட் – செய்தித் தொடர்பாளர் Andre Stùrmeit

ஃப்ராங்க்பர்ட் நகரில் ஒவ்வொரு லட்சம் பேருக்கும் 14,864 குற்றங்கள் நடப்பதாக நேற்று வெளியான குற்றவியல் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு லட்சம் பேருக்கு 14,616 குற்றங்களுடன் Hanover இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது.

2016இல் முதலிடம் பிடித்த பெர்லின் இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, அந்த ஒருமுறை தவிர மற்ற ஒவ்வொரு முறையும் ஃப்ராங்க்பர்ட் நகரே தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக குற்றம் நடக்கும் நகர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஃப்ராங்க்பர்ட் இந்த பெயரைப் பெறுவதற்கு அதன் தெருக்களின் நடக்கும் கத்தி தாக்குதல்களோ அல்லது வங்கிக் கொள்ளைகளோ காரணம் அல்ல என்று நகர காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் Andre Stùrmeit கூறுகிறார்.

ஃப்ராங்க்பர்ட் நகரின் இந்த அவப்பெயருக்கு காரணமாக அவர் கூறும் காரணம் வித்தியாசமாக இருக்கிறது.

அதாவது ஃப்ராங்க்பர்ட்டில் அதிக குற்றங்கள் பதிவு செய்யப்படுவதற்கான காரணம் ஜேர்மனியிலேயே பெரியதும், ஐரோப்பாவிலேயே நான்காவது பெரியதுமான அதன் விமான நிலையம்தான் என்கிறார் அவர்.

சரியான ஆவணங்கள் இல்லாமல் ஒருவர் விமான நிலையத்திற்குள் வந்தால் அதுவும் ஒரு குற்றமாக பதிவு செய்யப்படும், விமான நிலையத்தில் ஒரு சூட்கேஸ் திருட்டு போனால் அதுவும் குற்றமாக பதிவு செய்யப்படும்.

இவை அனைத்துமே ஃப்ராங்க்பர்ட் நகரில் நிகழ்ந்த குற்றங்களாக பதிவு செய்யப்படும். அப்படியானால், ஜேர்மனியின் இரண்டாவது பெரிய விமான நிலையத்தைக் கொண்ட முனிச் நகரம் உலகிலேயே வாழ்வதற்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம் பெறுகிறதே, அது எப்படி?

அதற்கும் விளக்கமளிக்கிறார், Andre Stùrmeit.

முனிச் விமான நிலையம் நகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. அதனால் அங்கு நடைபெறும் குற்றங்கள் முனிச் நகரில் நடைபெறும் குற்றங்களாக பதிவு செய்யப்படாது. நாளொன்றிற்கு 300,000 பேர் வேலை நிமித்தமாக ஃப்ராங்க்பர்ட் நகருக்கு வருகை தருகிறார்கள்.

அதாவது ஒரு நாளுக்கு சுமார் ஒரு மில்லியன் பேர் நகரில் புழங்குகிறார்கள். ஆனால் குற்றங்களைக் கணக்கிடும்போது நகரின் உண்மையான மக்கள் தொகையின் அடிப்படையிலேயே குற்றங்கள் கணக்கிடப்படுகின்றன.

இதனாலேயே ஃப்ராங்க்பர்ட் நகர் குற்றங்கள் அதிக நிகழும் நகர் என்று பெயர் எடுத்துள்ளது, அது உண்மையில்லை என்கிறார் அவர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !