ஜெயலலிதா வெளிநாட்டில் சிகிச்சை பெற விரும்பவில்லை: லண்டன் வைத்தியர்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சுகயீனமுற்று காணப்பட்ட காலகட்டத்தில் வெளிநாட்டில் சிகிச்சை பெற விரும்பவில்லையென லண்டன் வைத்தியர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வைத்தியர் ரிச்சர்ட் பீலே பேசும், காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

குறித்த 2 நிமிட காணொளியில் காணப்படுவதாவது, ஜெயலலிதாவிற்கு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக ஒருவரிடம் ரிச்சர்ட் பீலே குறிப்பிடுகின்றார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறினோம். ஆனால், ஜெயலலிதா அறுவை சிகிச்சை வேண்டாமென கூறினார். அவர் வெளிநாட்டிற்கு செல்ல விரும்பவில்லை.

அந்தவகையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டமையால் 2016ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதிக்கு பின்னர் என்னை அழைக்கவில்லை.

அத்துடன், அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம், ஜெயலலிதாவிற்கு சிறந்த சிகிச்சையை வழங்கியதென அக்காணொளியில் ரிச்சர்ட் பீலே கூறும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையகம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வெளிநாட்டு சிகிச்சைக்கு, ஜெயலலிதாவை அழைத்து செல்லாமை குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள்  வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரிச்சர்ட் பீலேயின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !