ஜெயலலிதா பிறந்த நாள்: அ.தி.மு.க.வினர் கோலாகல கொண்டாட்டம்! (படங்கள்) பிரதமர் மோடி – கவர்னர் வாழ்த்து

ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி, கவர்னர் ரோசய்யா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

இதே போல் தமிழக கவர்னர் ரோசய்யாவும் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67 பிறந்தநாளை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அமைச்சர் வளர்மதி கேக் வெட்டியதோடு, முதல் கேக்கை அமைச்சர் கோகுல இந்திராவுக்கு ஊட்டினார். அப்போது, கோகுல இந்திரா தேம்பித் தேம்பி அழுதார். ஜெயலலிதா பதவி இழந்த பின்னர் அமைச்சராக இவர் பதவியேற்ற போதும் தேம்பித் தேம்பி அழுத்தார்.

இந்த பிறந்தநாள் விழாவில் முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், வைத்திலிங்கம், காமராஜ் மற்றும் பொன்னையன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தி.நகரில் நேற்றிரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

ஜெயலலிதா இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டனில் கர்நாடகவை சேர்ந்த அதிமுகவினர் 40 கிலோ கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அரசு மருத்துவமனையிலேயே கேக் வெட்டி கொண்டாடியதோடு, அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கி அதன் பெற்றோரை மகிழ்ச்சிபடுத்தினார்.

ஜெயலலிதா பிறந்தநாளை மதுரையில் அமைச்சர் செல்வராஜ் அமர்க்களமாக கொண்டாடினார். 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட பால்குடம், அலகு குத்துதல், மரம் நட்டு அசத்தினார். மாலையில் வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளார்.

அமைச்சர் உதயகுமார், சாத்தூரில் இருந்து இருக்கன்குடி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை சென்றார். அவருடன் ஏராளமான அதிமுகவினர் சென்றனர்.

விருதுநகர் நடந்த ஜெயலலிதா தொடர்பான புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அன்னதானம் வழங்கினர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !