ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கமல் மவுனமாக இருந்தது ஏன்?: தமிழிசை கேள்வி

நடிகர் கமலஹாசன் தனது கருத்தை சொன்னதற்காக அமைச்சர்கள் அவரை மிரட்டுவதா, இவ்வாறு செயல்படுவது ஜனநாயக வரம்புக்கு உட்பட்டது அல்ல என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-

ஜனநாயக வரம்பு பற்றி சகோதரர் மு.க.ஸ்டாலின் பேசலாமா? தி.மு.க. ஜனநாயக வரம்புக்குள் செயல்படுகிறதா?.

எங்கோ வட மாநிலத்தில் ஒரு சாமியார் ஏதோ பேசிவிட்டார் என்பதற்காக ஆட்களை திரட்டி பா.ஜனதா அலுவலகம் மீத தாக்குதல் நடத்தினீர்களே அப்போது சகிப்புத்தன்மையும் ஜனநாயக மரபும் எங்கே போனது?

ஜனநாயக நாட்டில் கருத்து சொல்லும் உரிமையும், சுதந்திரமும் எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் கமலஹாசன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இயல்பாகவே இப்படிப்பட்ட கருத்துக்களை துணிச்சலுடன் சொல்லும் குணம் கொண்டவர் ஒரு வருடத்துக்கு முன்பு ஏன் மவுனமாக இருந்தார்? ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை எதுவும் சொல்லவில்லையே.

அப்போது இந்த அரசு மீது ஊழல் புகார் எதுவும் இல்லையா, தி.மு.க. சிக்கியிருக்கும் 2ஜி விவகாரம் ஊழலா? இல்லையா? அப்போதெல்லாம் இந்த கருத்து எங்கே போனது?

தி.மு.க. ஆட்சியின் போது குடும்ப ஆதிக்கத்தால் சினிமா துறையே கழுத்து நெரிக்கப்பட்டதே படங்களை வெளியிட தியேட்டர்கள்கூட கிடைக்காத சூழ்நிலை உருவானதே. அப்போது அதைப் பற்றி கருத்து சொல்லாதது ஏன்?

கருத்துக்களை சூழ்நிலைக்கு ஏற்ப சூழ்நிலையை பயன்படுத்தி சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் கருத்துக்கள் விமர்சனத்துக்குள்ளாகும்

இவ்வாறு அவர் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !