ஜூன் மாதம் – புதிய மாற்றங்கள்
இன்று ஜூன் 1 முதல், எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது. 0.45% எனும் மிகச்சிறிய அளவில் இதன் கட்டணம் குறைக்கப்படுகின்றது.
அதேவேளை, மின்சார கட்டணம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 5.9% வீதத்தால் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது.
புதிய வானங்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை இன்று முதல் வழங்கப்படும். வருமான வரி செலுத்தபடும் €18,000 யூரோக்கள் வருவாய்க்கு குறைவான ஊதியம் கொண்டவர்கள், தாம் வாங்கும் புதிய மின்சார, ஹைபிரிட், பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு புதிய விசேட கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
இதன்படி, அவர்கள் €3,000 கள் வரையும், ஹைபிரிட் வானங்கள் வாங்குபவர்கள் €5,000 வரையும் கொடுப்பனவுகள் பெற்றுக்கொள்ளலாம். இந்த கொடுப்பனவுகள் முதல் 200,000 வாகனங்களுக்கு மாத்திரமே பொருந்தும்.
குளிர்கால விடுப்பு (Trêve hivernale) இன்று முதல் மேலும் 40 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத நடுப்பகுதியில் வழமையாக முடிவுக்கு வரும் இந்த குளிர்கால விடுப்பு, மே மாத இறுதி வரை பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விடுப்பு ஜூலை 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், வாடகைக்கு இருப்பவர்களை எக்காரணம் கொண்டும் வெளியேற பணிக்க முடியாது. அவர்கள் வாடகை செலுத்தவில்லை என்றபோதும் அவர்களை வெளியேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 2 செவ்வாய்க்கிழமை முதல்..
இல்-து-பிரான்ஸ் மாகாணம் மற்றும் Guyana, Mayotte ஆகிய பகுதிகள் கொரோனா வைரஸ் காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கையில் இருந்து செம்மஞ்சள் நிறத்துக்கு உத்தியோகபூர்வமாக மாற உள்ளது. மீதமான அனைத்து மாவட்டங்களும் தொடர்ந்தும் பச்சை நிறத்தில் இருக்கும்.
100 கி.மீ அதிகபட்ச தூர பயண கட்டுப்பாடு நாளை முதல் முடிவுக்கு வருகின்றது.
நாளை முதல் StopCovid எனும் செயலியை தரவிறக்கி மக்கள் பயன்படுத்தலாம். இது ஒரு கொவிட் 19 வைரஸ் பாதுகாப்பு செயலியாகும்.
அனுமதியளிக்கப்பட்ட உணவகம், விடுதிகள், மதுச்சாலைகள், தேநீர் சாலைகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன.
பரிஸ் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பூங்காக்கள், தோட்டங்கள், புல்வெளி பகுதிகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன.
‘பச்சை எச்சரிக்கை’ வலையங்களில் உள்ள நீச்சல் தடாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுத் திடல்கள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. (செம்மஞ்சள் வலையங்களில் ஜூன் 22 ஆம் திகதி திறக்கப்படுகின்றன!)
அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள் போன்ற இடங்கள் நாளை திறக்கப்படுகின்றன. (முகக்கவசம் அணிவது கட்டாயம்)
100% பாடசாலைகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. வகுப்புக்கு 15 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள்.