ஜமால் கஷோக்கி தொடர்பில் நீதியான விசாரணை- சவுதி உறுதி

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி காணாமற்போன விவகாரம் தொடர்பில் ஒரு முழுமையான விசாரணையை மேற்கொள்வதாக சவுதி அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் தலைநகர் றியாதில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சவுதி மன்னர் சல்மான், இளவரசர் முகம்மது பின் சல்மான், வெளிவிவகார அமைச்சர் அதென் அல்-ஜுபைர் ஆகியோரை சந்தித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி விவகாரம் தொடர்பில் ஒரு நாள் கலந்துரையாடல்களை நேற்று மேற்கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடல்களில் சவுதி நிர்வாக அதிகாரிகள், அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக துருக்கி அதிகாரிகள், வெளிநாட்டு ஊடகங்கள் மேற்கொண்ட குற்றச்சாட்டிற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜமால் கஷோக்கியின் விவகாரம் தொடர்பில் முழுமையான, நியாயமான விசாரணையை மேற்கொள்வதாகவும் அந்நாடு வாக்குறுதி வழங்கியுள்ளதாக மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு மேலாக காணாமற்போன சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, கொல்லப்பட்டுள்ளதாகவும் அவருடைய சடலம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கு அதிகாரிகள் சவுதி அரேபியாவின் மீது கடந்த நாட்களாக குற்றஞ்சாட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !