ஜப்பான் பிரதமர் அபே இன்று குஜராத் வருகை: மோடியுடன் நாளை புல்லட் ரெயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அவர் குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையம் வந்து இறங்குகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு ஜப்பான் பிரதமரை வரவேற்கிறார்கள். ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேராக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சாலை மார்க்கத்தில் காரில் செல்கிறார். அவருடன் பிரதமர் மோடியும் செல்கிறார். காந்தி ஆசிரமத்தை ஜப்பான் பிரதமர் சுற்றிப் பார்க்கிறார்.

ஜப்பான் பிரதமர் வருகையையொட்டி டுவிட்டரில் அவரை வரவேற்று அந்நாட்டு மொழியில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். உங்களை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று மாலை ஆமதாபாத்தில் இந்தியா- ஜப்பான் நாட்டு கூட்டம் நடக்கிறது. இதில் இரு நாட்டு பிரதமர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

நாளை ஆமதாபாத்தில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் அபேயும் மும்பை- ஆமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.

மும்பை- ஆமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கும் இந்த புல்லட் ரெயில் திட்டம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. 2022-23ம் ஆண்டில் திட்டம் முடிவடைந்து ரெயில் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு ஜப்பான் அரசு ரூ.88 ஆயிரம் கோடி நிதியை 0.1 சதவீத வட்டியில் கடனாக அளிக்கிறது. இந்த நிதி 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்படும்.

508 கி.மீ. தூரத்தில் 468 கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையில் அமைக்கப்படும் தண்டவாளத்திலும், 27 கி.மீ. தூரம் தரைவழி சுரங்கத்திலும், 7 கி.மீ. தூரம் கடல் வழி சுரங்கத்திலும், 13 கி.மீ. தரையிலும் புல்லட் ரெயில் ஓடும்.

முன்னதாக மோடி- அபே பேச்சுவார்த்தையின் போது 15 ஒப்பந்தங்களில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திடுகிறார்கள். இந்த ஒப்பந்தங்கள் குஜராத் மாநிலத்தில் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான திட்டங்கள் ஆகும்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !