Main Menu

ஜப்பான் அரசர் அகிஹிடோ இன்றுடன் அரியணையில் இருந்து இறங்குகிறார்

ஜப்பான் அரசர் அகிஹிட்டோ அரியணை துறப்பதாக அறிவித்து டோக்கியோவில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்றில் தனது கடைசி உரையை வழங்கியுள்ளார்.

ஜப்பானில் இருநூறு ஆண்டுகளில் அரியணை துறக்கும் முதல் அரசர் இவர் ஆவார்.

அகிஹிட்டோவுக்கு 85வயது ஆகிறது. வயது மூப்பின் காரணமாகவும் அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாலும் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

அவருக்கு பிறகு முடியரசர் நருஹிட்டோ பதவியேற்கவுள்ளார். அது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.

ஜப்பான் அரசர்களுக்கு எந்தவித அரசியல் அதிகாரமும் இல்லை. ஆனால் அவர்கள் நாட்டின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றனர்.

தனது கடைசி உரையில், அகிஹிட்டோ, “ஜப்பான் மற்றும் உலகுக்கு அமைதி மற்றும் வளம் வேண்டும்” என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

“என்னை அடையாளமாக ஏற்றுக் கொண்டு எனக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

“அடுத்துவரக்கூடிய ரெய்வா சகாப்தம் அமைதியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என நம்புகிறேன். இந்த உலகின் உள்ள மக்களின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்காக வேண்டி கொள்கிறேன்” என தெரிவித்தார் அரசர்

ஜப்பானின் அரச குடும்ப மூதாதையர்களுக்கு தான் பதவியிலிருந்து இறங்குவதை அறிவிக்கும் சடங்கில் பங்கேற்றார் அரசர்.

ஜப்பான்

இந்த அரியணை துறக்கும் நிகழ்ச்சி டோக்கியோவில் உள்ள அரச மாளிகையில் இடம்பெற்றது.

உள்ளூர் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

ஜப்பான்

அரசர் அகிஹிட்டோ மற்றும் அரசி மிசிகோ வருகைக்குப் பிறகு அது சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தது.

இன்று நள்ளிரவு வரை அகிட்டோ அரசராக இருந்தாலும் அவரின் கடைசி உரையை வழங்கியவுடன் அந்த நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது.

உயிரோடு இருக்கும் எந்த ஒரு நபரும் ஜப்பான் அரசர் பதவி விலகும் நிகழ்ச்சியை இப்போதுதான் முதன்முதலில் பார்த்திருப்பர்

புதன் காலை, முதல் நிகழ்ச்சியாக முடியரசர் நருஹிடோ அரசின் பொக்கிஷங்களின் பொறுப்பை ஏற்பார்.