ஜப்பானை புரட்டியெடுக்கும் வெள்ளம்: உயிரிழப்பு 179ஆக அதிகரிப்பு!

ஜப்பானில் பெய்துவரும் அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 179ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இரண்டு இலட்சம் பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும், சில பகுதிகளில் வெள்ள நிலைமை குறைவடைந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளன. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 20 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் வெள்ள நிலைமை குறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இரண்டு இலட்சம் பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை இதுவரை 2 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளுக்கான நீர் விநியோகம் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.
நிலச் சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் பலர் தங்களது வீடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ள பேரிடரை எதிர்கொள்வதற்காக ஜப்பான் அரசு அவசரகால மேலாண்மை மையத்தை அமைத்துள்ளதுடன், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜப்பானின் மேற்குப் பகுதியை பிரதமர் ஷின்ஜோ அபே பார்வையிட்டார்.

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப முழு முயற்சியுடன் செயற்படுவோம் என இதன்போது தெரிவித்த ஜப்பான் பிரதமர், தேவையான சுகாதார நடவடிக்கைகள், வெள்ளத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் என்பத துரிதமாக முன்னெடுக்கப்படுமென தெரிவித்தார்.

சுமார் 36 வருடங்களுக்குப் பின்னர் ஜப்பானில் ஏற்பட்ட மிகவும் மோசமான வெள்ள அனர்த்தமாக தற்போதைய வெள்ள அனர்த்தம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !