ஜப்பானில் நடைபெற்ற குத்துச்சண்டை கண்காட்சி போட்டியில் மேவெதர் வெற்றி!

விளையாட்டுக்களில் குத்துச்சண்டை என்பது தனித்துவமானதும் தனி நபர் திறமையையும் வெளிக்காட்டும் விளையாட்டு என்பதற்கு அப்பால் இது ஒரு வீர விளையாட்டு என்று சொல்வதே மேல்.

அந்தவகையில் இந்த குத்துச்சண்டையில் ஈடுபடும் வீரருக்கு நிச்சயம் நல்ல உயரம், அச்சுறுத்தும் உடற்கட்டு, நீளமான ஆக்ரோஷத்தை வெளிக்காட்டும் கைகள், எதிராளியைத் தாக்கும் பலம் என்பன நிச்சயம் இருக்க வேண்டும்.

இவற்றில் நிச்சயம் குத்துச் சண்டை வீரரின் உயரம் மிக அவசியம். வீரனின் கைகள் எந்த அளவுக்கு நீண்டு தாக்க முடிகிறதோ அந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க முடியும்.

ஆனால் இந்த அடிப்படை உடலமைப்பு எதிர்பார்ப்பை எல்லாம் தகர்த்தெறிந்து, இவை இல்லாவிட்டாலும் விவேகமும் வேகமும் இருந்தால் வெற்றிகள் எமக்கு வாகை சூடும் என்று செயலிலே நிரூபித்துக் காட்டியவர், அமெரிக்காவின் குத்துச்சண்டை வீரர் ஃபிளாய்ட் மேவெதர்.

குத்துச்சண்டை விளையாட்டில் மகத்தான வீரராக பார்க்கப்படும் மேவெதர், இதுவரை 50 போட்டிகளில் விளையாடி 50 போட்டிகளிலும் வெற்றியை மட்டுமே பெற்ற மகத்தான சாதனை வீரராவார். அதிலும் 50 போட்டிகளில் 27 போட்டிகளை நொக் அவுட் முறையில் வென்றுள்ளமை அவரில் அரிய சாதனைகளில் ஒன்று.

தனது 49 ஆவது போட்டியில் ஒய்வுபெறுவதாக அறிவித்த அவர். 50 ஆவது போட்டியின் வெற்றியையும் ருசி பார்த்துவிட்டு ஓய்வுபெற்றார்.

இந்நிலையில், குத்திய கைகள் மீண்டும் குத்த கைகள் ஏங்குகின்றது என அடிக்கடி கூறி வந்த மேவெதர், புத்தாண்டை முன்னிட்டு ஜப்பானில் நடைபெற்ற கண்காட்சி போட்டியொன்றில் பங்கேற்று அதிலும் வெற்றியை ருசித்துள்ளார்.

ஆம்! ஜப்பானின் ரிஷின் என்ற தற்காப்புக் கலை போட்டிகள் நடத்தும் நிறுவனம் ஒன்று நடத்திய குத்துச்சண்டை போட்டியொன்றில், குத்துச்சண்டை போட்டிகளில் அனுபவமற்ற 20 வயதே ஆன கிக்- பொக்ஸிங் வீரரான  டென்ஷின் நசுக்காவ என்ற வீரருடன் மேவெதர், மோதினார்.

இந்த போட்டி, மூன்று சுற்றுக்கள் என்றும், ஒவ்வொரு சுற்றுக்கும் 3 நிமிடங்கள் என ஒன்பது நிமிடங்கள் கொண்ட போட்டியாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தனது இரும்பு கரங்களை கொண்டு, ஒன்பது நிமிட போட்டியை வெறும் 139 வினாடிகளில் முடித்த மேவெதர் எளிதாக வெற்றி பெற்றார்.

இதற்கு சம்பளமாக ஃபிளாய்ட் மேவெதருக்கு 9 மில்லியன் டொலர்கள் கொடுக்கப்பட்டது. விளம்பர நோக்கத்திற்காக புது வருட விழாவாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், மேவெதர் பெரிய அளவில் பணம் ஈட்டி புது வருடத்தை செல்வச் செழிப்போடு ஆரம்பித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !