ஜப்பானில் அவசரகால நிலை பிரகடனம்
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதை முன்னிட்டு ஜப்பானில் நாடளாவிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ மற்றும் ஆறு மாவட்டங்களை உள்ளடங்கலாக அந்நாட்டின் மொத்த சனத்தொகையில் 44 வீதமானவர்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து குறித்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஊரடங்கு உத்தரவானது ஏறக்குறைய ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
“மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸானது நாடளாவிய ரீதியில் மிகப்பாரிய அளவான சேதத்தினை மனிதர்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு ஏற்படுத்தும் என நாங்கள் கணிப்பிட்டதால் குறித்த நாடளாவிய அவசரகால நிலையினை பிரகடனப்படுத்தியுள்ளோம்” என அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த வைரஸ் பரவலால் ஏற்படுத்தப்பட்டுள்ள தாக்கத்தினை ஈடு செய்ய அந்நாட்டு அமைச்சரவையினால் 990 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3,906 பேர் இலக்காகியுள்ள அதேவேளை குறித்த வைரஸ் பரவலால் 92 பேர் இதுவரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.