ஜனாதிபதி வேட்பாளர் தேவை: மஹிந்த அறிவிப்பு!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேடிக்கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்று சந்தித்தன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அடுத்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். விரைவில் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளரை அறிவிப்போம். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நானும் தேடிக் கொண்டிருக்கின்றேன், உங்களிடமிருந்தும் இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பார்க்கின்றேன்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு கூட்டு எதிரணியிலிருந்து போட்டியிடுவதா அல்லது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது அரசாங்கத்திலிருந்து விலகிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கூட்டு எதிரணிக் கட்சி உறுப்பினர்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்தவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !