ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
சின்சோ வகை வாள்களை இலங்கைக்குள் கொண்டுவருவதனை தடைசெய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் தயாரிக்குமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். அனைத்து வகையான சின்சோ வாள்களையும் தடைசெய்வதற்காக அண்மையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்துள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மரக் குற்றிகளை வைத்திருக்கும் மர ஆலை உரிமையாளர்களின் அனுமதிப் பத்திரங்களை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
காடழிப்புக்கு ஏதுவாக அமையும் சகல செயற்பாடுகளையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
சட்டவிரோத மரக்கடத்தலை தடுப்பதற்காக நாடுமுழுவதும் பரந்தளவிலான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கான சட்ட திட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பாரிய செயற்திட்டங்களின் ஊடாக வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதைப் போன்று, வன வளங்களைப் பாதுகாப்பதற்கான சட்ட விதிமுறைகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.