ஜனாதிபதி மக்ரோனால் பதவி நீக்கப்பட்டவர் ஆலோசகர் பதவியில்!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனால் பதவிநீக்கப்பட்ட அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸாண்ட்ரே பெனல்லா, ஆலோசகர் பதவியில் நீடிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, பெனல்லாவின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக அரசாங்கம் தகவல் கோரியுள்ளது. அத்தோடு, குறித்த பயணங்களில் அரசாங்கத்தை தொடர்புபடுத்த வேண்டாமென வலியுறுத்தியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும், கடந்த வாரம் ஜனாதிபதி மக்ரோன் சாட் நாட்டிற்கு விஜயம் செய்வதற்கு முன்பாக பெனல்லாவும் அங்கு சென்றிருந்தார். இந்நிலையில், பெனல்லாவுக்கும் மக்ரோனுக்கும் இடையில் இன்னும் தொடர்புள்ளதாக பல விமர்சனங்களும் வெளிவந்தவண்ணமுள்ளன.

இதனையடுத்து, பெனல்லாவின் ஆலோசகர் பதவி தொடர்பான சகல விபரங்களையும் முன்வைக்குமாறு பிரான்ஸ் அமைச்சரவையின் தலைவர் பட்ரிக் ஸ்ரோதா வலியுறுத்தியுள்ளார். அதே சந்தர்ப்பத்தில், முன்னாள் பொறுப்புக்கள் தொடர்பான விடயங்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் பெனல்லாவை கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த மே மாதம் இடம்பெற்ற மே தின பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை பெனல்லா தாக்கியமை குறித்த காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜனாதிபதி மக்ரோனுக்கு மிகவும் நெருக்கமான குறித்த பாதுகாப்பு அதிகாரி தொடர்பில் எழுந்த தொடர் விமர்சனங்களையடுத்து அவர் கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி பதவிநீக்கப்பட்டார்.

அவர் மீதான நீதிமன்ற விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன. இந்நிலையிலேயே அவர் ஆலோசகர் பதவியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பெனல்லாவின் இரு இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்குமாறு கடந்த ஜூலை மாதம் வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியிருந்தது. எனினும், குறித்த கடவுச்சீட்டை பெனல்லா இன்னும் பயன்படுத்தி வருவதாக மீடியாபார்ட் என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !