ஜனாதிபதி பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார்

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்வின் (Rodrigo Duterte) விசேட அழைப்பின் பேரில் ஐந்து நாள் அரசமுறை விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (15) முற்பகல் பிலிப்பைன்ஸ் பயணமானார்.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இது தொடர்பான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்கும் (Rodrigo Duterte) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை முற்பகல் இடம்பெறவுள்ளது. இருநாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் உறவுகளை, பரஸ்பர நன்மையை நோக்கமாகக்கொண்டு புதிய துறைகளை நோக்கி விரிவுபடுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் இதன்போது அரச தலைவர்கள் விசேட கவனம் செலுத்தவுள்ளனர்.

தனது இந்த விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கும் லெஸ்பெனோஸிலுள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தக்கஹிகோ நாக்காஓவை (Takehiko Nakao) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும் என்பதுடன், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இவ்வருடத்தில் அரச தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயமும் இதுவாகும்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அமோக வரவேற்பளிப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவை கட்டியெழுப்பி சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதியின் நட்புறவு வெளிநாட்டு கொள்கையில் மற்றுமொரு முக்கிய விஜயமாக இந்த விஜயத்தை குறிப்பிட முடியும்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !