ஜனாதிபதி ட்ரம்பின் சர்ச்சைக்குரிய அறக்கட்டளையை மூட தீர்மானம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய அறக்கட்டளையை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் மூடுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் நிதியை ட்ரம்பும், அவரது புதல்வர்களும் முறைக்கேடாக பயன்படுத்துவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் எஞ்சிய பங்குகளை பராமரித்துவரும் நியூயோர்க் சட்டமா அதிபர் பார்பரா அன்டர்வுட்டினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அறக்கட்டளையின் சொத்துக்கள் தன்னுடைய அலுவலகத்தால் பராமரிக்கப்பட்டுவரும் ஏனைய தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த அறக்கட்டளையின் நிதியை அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மூன்று புதல்வர்களும் தனிப்பட்ட தேவைகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், சட்டமா அதிபர் இவ்விடயத்தை அரசியலாக்க முயற்சிப்பதாக அறக்கட்டளை தரப்பு வழக்கறிஞர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அண்மையில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் சுழன்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், அந்தவரிசையில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது.

இதேவேளை, 2016 ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த வழக்கில் ட்ரம்பின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃப்ளினுக்கு நேற்று தண்டனை உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !