ஜனநாயகத்தை நிலைநிறுத்த ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: விஜேதாச ராஜபக்ஷ

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பநிலை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில், அதனை தீர்க்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆளுந்தரப்பின் சார்பில் இன்று (வியாழக்கிழமை) விஜேதாச ராஜபக்ஷ மாத்திரம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார். அதன்போது ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”கடந்தகாலத்தில் பொறுப்புக்கூறவேண்டிய அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற சிந்தனையால் 3 தசாப்தால யுத்தத்தை நாடு எதிர்கொண்டது.

இலங்கை பிரஜைகள் 60000 பேர் உயிரிழந்தனர். 27 ஆயிரம் படையினர் உயிர்நீத்தனர். அதனை மீண்டும் ஏற்படுத்தாத வகையில் அனைவரும் செயற்பட வேண்டும்.

நல்லாட்சியில் பல விடயங்கள் சுயாதீனப்படுத்தப்பட்டன. நாடு புதிய பாதையில் செல்லுமென்ற நம்பிக்கையில் வாக்களிக்கப்பட்டது. ஆரம்பத்தில் நல்லாட்சி சிறந்த முறையில் சென்றது. எனினும், பொறுமையுடன் ஆட்சிநடத்துவதற்கான சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கும் ஐ.தே.க. தலைவர் ரணிலுக்கும் கிடைக்கவில்லை. அவர்கள் அதில் தோல்விகண்டனர்.

நாட்டில் கடந்த காலங்களில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் நடந்தேறின. தற்போதைய விடயங்கள் வரலாற்றில் கரைபடிந்ததாக அமையும். எதிர்காலம் எம்மை பரிகசிக்கும்.

இந்நிலையில், ஜனநாயகம் தொடர்பான நம்பிக்கையை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு நல்லெண்ணத்துடன் செயற்பட வேண்டும்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற சரி, பிழை பற்றி ஆராய்வதை விடுத்து இந்த விடயத்தில் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட்டு, ஜனநாயகத்தின் வழிநின்று செயற்பட வேண்டும்.

அது எந்தக் குழுவாக இருந்தாலும், அவர்கள் ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும். அதற்காக நான் அர்ப்பணிப்புகளை செய்ய தயார். ஏனையவர்களும் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

ஆகவே, நாடாளுமன்ற செயற்பாடுகளை நிறுத்தி ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். பெரும்பான்மை உள்ளவர்களுக்கு ஆட்சியமைக்க இடமளித்து ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும்” என்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !