Main Menu

ஜனநாயகத்தின் கதவுகளை பிரதமர் மோடி திறக்கவேண்டும் – ஸ்டாலின்

ஜம்மு – காஷ்மீரில் அடைக்கப்பட்டிருக்கம் ஜனநாயகத்தின் கதவுகளை பிரதமர் மோடி திறக்கவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து தெரவித்த அவர், “ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா,  மெகபூபா முப்தி ஆகியோரை அடக்குமுறை சட்டமான ‘பொது பாதுகாப்புச் சட்டத்தின்’ கீழ் கைது செய்திருப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆகஸ்ட் 5-ந் திகதியில்  இருந்து எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் எந்தக் கேள்வியும் கேட்காமல் முன்னாள் முதல்வர்களையும்  முக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பது  ஜனநாயகத்திற்கு கைவிலங்கும், கால்விலங்கும் போடும் கொடுமையான நிகழ்வு ஆகும்.

ஜனநாயகத்தின் மீதும்  அரசியல் சட்டத்தின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எள்ளி நகையாடுவது போல் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

இது போன்ற மிருகத்தனமான சட்டங்கள் எந்த மாநிலத்திலும் பயன்படுத்தப்படலாம் எந்த அரசியல்வாதி மீதும் போடப்படலாம் என்பது நாட்டிற்கும்  மத்திய-மாநில உறவுகளுக்கும் ஏற்றதுமல்ல.

காஷ்மீரை தொடர்ந்து பதற்றமுள்ள பகுதியாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு ஆசைப்படுகிறதோ என்ற சந்தேகம் இப்போது மக்கள் மனதில் எழுகிறது.

ஆகவே ஆறு மாத சிறைக்காவல் முடிவடைந்த நிலையில்  திடீரென்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள  அனைத்து அரசியல் தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும்.  அடைக்கப்பட்டிருக்கும் ஜனநாயகத்தின் கதவுகளைத் திறந்துவிட வேண்டும் என்றும்; பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமர் இந்திய நாட்டின் பிரதமர், எல்லோருக்கும் பிரதமர். அவர் ஏதோ பா.ஜ.க.விற்காக மட்டுமே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பிரதமர் அல்ல என்பதை நினைவூட்டுவது பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க.வின் கடமை என்று கருதுகிறேன்.

ஆகவே இனியும் காலதாமதம் செய்யாமல் புதிய புதிய காரணங்களை செயற்கையாகக் கண்டுபிடித்து காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிடுமாறும்  காஷ்மீரில் ஜனநாயகக் காற்றை அனைத்துத் தரப்பு மக்களும்  எந்தவிதத் தடையுமின்றிச் சுவாசிக்க இடமளிக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.