சோம்ப்ஸ் எலிசே தாக்குதல்! – முழுமையான தொகுப்பு

நேற்று வியாழக்கிழமை இரவு 8.50 மணிக்கு சோம்ப்ஸ் எலிசேயில் பயங்கரவாதி காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தான். ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டும், ஒருவர் படுகாயமடைந்தும் உள்ளனர். இது குறித்த முதல்கட்ட தகவல்கள் தெரிவித்திருந்தோம். தற்போது கிடைக்கப்பெற்ற செய்திகளின் படி…,
சோம்ப்ஸ் எலிசேயில் வீதி கண்காணிப்பில் நின்றுகொண்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து கண்காணிப்புக்காக ஒரு Audi வாகனத்தை நிறுத்தியுள்ளனர். வாகனத்துக்குள் இருந்த நபர் ஒருவர், காவல்துறையினரை அருகில் வரும்படி அழைத்துள்ளார். அதே சமயத்தில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதி இயந்திர துப்பாக்கியுடன் வாகனத்துக்குள் இருந்து வெளியேறி, காவல்துறையினரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளான். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே காவல்துறை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்.
அதன் பின்னர், பயங்கரவாதி தப்பிச்செல்ல முயன்றபோது, பிறிதொரு காவல்துறை அதிகாரியால் சுடப்பட்டு, பயங்கரவாதியும் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளான். கொல்லப்பட்ட பயங்கரவாதி, Seine-et-Marne பகுதியைச் சேர்ந்தவன் என உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, Seine-et-Marne பகுதியில் பயங்கரவாதி வசித்த வீடு உட்பட அப்பகுதி அனைத்தும் காவல்துறையினரால் முற்றாக சோதனையிடப்பட்டது.
தாக்குதல் நடத்திய 39 வயதுடைய பயங்கரவாதி, Livry-Gargan, (Seine-Saint-Denis) ஐ பிறப்பிடமாக கொண்டவன் எனவும், இதற்கு முன்னதாக பல குற்றச் செயல்களில் தொடர்புடையவன் எனவும், பலமுறை கைதுசெய்யப்பட்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர இனவாத கொள்கைகள் கொண்டதால் முன்னர் உளவுத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பயங்கரவாதி, தனது  23 ஆவது வயதில் (2001 ஆம் ஆண்டு) இரு காவல்துறையினரை தாக்கியுள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து, ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், ‘நாடு தழுவிய அஞ்சலி கூட்டமும் நடைபெறும்!’ என அறிவித்துள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து, இரவு 10 மணி அளவில், ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, பிரதமர் பெர்னாட் கசநவ், உள்துறை அமைச்சர் Matthias Fekl, நீதித்துறை அமைச்சர் Jean-Jacques Urvoas ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தாக்குதல் தொடர்பான, பயங்கரவாதி தொடர்பான மேலதிக விசாரணைகளை பரிஸ் பயங்கரவாத குற்ற தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து மூன்று மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. Champs-Elysées-Clemenceau, George V மற்றும் F. Roosevelt நிலையங்கள் நள்ளிரவு வரை மூடப்பட்டிருந்தன.  de l’Avenue des Champs-Elysées வீதியும் மூடப்பட்டுள்ளது. இப்பகுதி உட்பட சுற்றியுள்ள பகுதிகளிலும் போதிய காரணங்கள் இன்றி, நுழையவேண்டாம் என பொதுமக்களை கேட்டுகொண்டுள்ளனர்.
இத்தாக்குதலின் போது, சுற்றுலாப்பயணி ஒருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதி சரமாரியாக சுட்டதில், சுற்றுலாப்பயணி ஒருவரின் முழங்காலில் குண்டு பாய்ந்து வீழ்ந்துள்ளார்.
இஸ்லாமியதேச பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு, உடனடியாக உரிமை கோரியுள்ளனர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !