சோம்ப்ஸ் எலிசேயில் மாபெரும் அஞ்சலி நிகழ்வு- எலிசே அறிவிப்பு

பாடகர் Johnny Hallyday இன் அஞ்சலி நிகழ்வுகள் வரும் சனிக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற உள்ளதாக சற்று முன்னர் எலிசே அறிவித்துள்ளது.
தேசத்தின் பாடகர் என அழைக்கப்பட்ட Johnny Hallyday தனது 74 வது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்காக இறுதி அஞ்சலி நிகழ்வுகள் தற்போது அவரது இல்லத்திலும், பல்வேறு தேவாலயங்களிலும் இடம்பெற்று வருகிறது. நாளை வெள்ளிக்கிழமை முதல் ஈஃபிள் கோபுரத்தில் Mercy Johnny என எழுத்துக்கள் திரையிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மிகப்பெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றுக்கான ஏற்பாடும் இடம்பெற்று வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நிகழ்வு வரும் சனிக்கிழமை (நாளை மறுதினம்) சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் இடம்பெற உள்ளதாக உத்தியோகபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இம்மானுவல் மக்ரோன், பிரிஜித் மக்ரோன் உள்ளிட்ட பல தலைவர்கள், குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Johnny Hallyday இன் குடும்பத்தினரிடம் அனுமதி கோரியதன் பின்னரே பரிசில் நிகழ்த்த திட்டமிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குடும்பத்தினர் அனைவரும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். அஞ்சலி நிகழ்வின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து பின்னர் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !