Main Menu

சோமாலியாவில் அரச படைகள் அதிரடித் தாக்குதல்: 33 பயங்கரவாதிகள் உயிரிழப்பு!

சோமாலியாவின் லோவர் ஷாபெல்லே பகுதியில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போதே பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோமாலியாவின் பல பகுதிகளில் அல்-கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான அல்-ஷபாப்பின் குழுக்கள் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன.

சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

உள்நாட்டு இராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாகத் தாக்குதல் நடத்திவரும் இந்த பயங்கரவாதிகள் மத்திய ஆபிரிக்காவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். மேலும், வெளிநாட்டினர் வந்து செல்லும் உணவகங்களைக் குறிவைத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு, கடந்த சனிக்கிழமையன்று, சோமாலிய தலைநகர் மொகாடிஷுவில் தற்கொலை டிரக் குண்டுவெடிப்பில் 2 துருக்கிய பிரஜைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 90 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கு அல்-ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.