சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: நிலங்களை திருப்பி அளிக்க உத்தரவு
விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படுத்த முனைந்த சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்துக்காக, அரசு கையகப்படுத்திய நிலங்களை 8 வாரத்தில் திருப்பி ஒப்படைக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய பாமக தரப்பு வழக்குரைஞர் பாலு தெரிவித்தார்.
இந்த திட்டம் தொடர்பாக 15 கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், அனைத்துக்கும் விடைகளைக் கண்டது என்று கூறிய பாலு, மத்திய அரசு இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்யவில்லை என்றும், விரிவான திட்ட அறிக்கையை உருவாக்கவில்லை என்றும் கூறி திட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ததாக கூறினார்.
மீண்டும் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த எந்த அளவுக்கு வாய்ப்பு உள்ளது என்று கேட்டபோது, மீண்டும் புதிதாக திட்ட அறிக்கையையும், சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையையும் தயாரித்து வேண்டுமானால் அரசு செயல்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறினார் பாலு.
இந்த திட்டத்தை எதிர்த்து, விவசாயிகள் சிலர் வழக்குத் தொடர்ந்திருனர். பாமக-வும் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த முனைந்த மத்திய மாநில ஆளுங்கட்சிகளான பாஜக, அதிமுக-வுடன் பாமக கூட்டணி வைத்திருப்பதாக விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பு தற்போது பாமக-வுக்கு ஆசுவாசத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு எதிரான பேசியும், செயல்பட்டு அதற்காக கைது செய்யப்பட்டவரான சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ் இந்த தீர்ப்பு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசினார்.
“யுத்தத்தில் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், போர் முடியவில்லை. அரசு அவ்வளவு சீக்கிரத்தில் பின்வாங்காது. திட்டத்தை கைவிடாது. இந்த வழக்கில் பாமக தாக்கல் செய்த மனு அவ்வளவு வலுவானதல்ல. பாஜக-பாமக உறவு வரும் என்பதைக் கணித்து, அரசுக்கு எதிரான உணர்வைத் தணிக்கும் வகையில்தான் பாமக இந்த வழக்கில் இணைந்தது” என்று கூறினார் பியுஷ்.
அரசாணை ரத்து
சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்பளித்துள்ளதாக சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து பத்துக்கும் மேற்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதில் பொதுநல வழக்கு தொடுத்த சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் இந்த திட்டத்தில் முறையாக பாதிப்புகளை ஆய்வு செய்யவில்லை என வாதாடினார்.
பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சூரிய பிரகாசம் விவசாய நிலங்களை ஆறு வாரங்களுக்குள் விவசாயிகளிடம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் ஆணையிட்டனர் என கூறினார். இந்த திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் இழப்புகளை அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் இதற்கான நிபுணர் குழு அறிக்கையில் இருந்த தவறுகளையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர் என்றும் அவர் கூறினார். சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் உறுதிப்படுத்தினார்.
நன்றி பிபிசி