Main Menu

செம்மணி – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்து 19 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு

செம்மணி – சிந்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட பரீட்சார்த்த அகழ்வின்போது, இன்று வரை 19 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக் கூட்டுத் தொகுதிகளும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறித்த எலும்புக் கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பிலிடுவார் என சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த பரீட்சார்த்த அகழ்வு யாழ்ப்பாணம் நீதவான் ஆ.ஆனந்தராஜா மேற்பார்வையில் இன்று முன்னெடுக்கப்பட்டதுடன், பரீட்சார்த்த அகழ்வுப் பணியானது இன்றுடன் தற்காலிகமாக நிறைவுறுத்தப்பட்டது.
இந்த அகழ்வுப் பணியை மேலும் 45 நாட்களுக்கு நீடித்து நீதவான் ஆ.ஆனந்தராஜா நேற்று அனுமதி அளித்திருந்தார். அதன்படி, 45 நாட்களுக்கான அகழ்வுப்பணிக்கான பாதீடு இன்று சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனினால் யாழ்ப்பாணம் நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கமைய அடுத்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தேச திகதியாக எதிர்வரும் 20 ஆம் திகதியை நீதவான் அனுமதித்துள்ளார்.
இந்த உத்தேச திகதிக்குள், சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுக்கான நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியை உத்தேச திகதியில் ஆரம்பிக்க முடியுமா என்பதை நீதிமன்றம் அறிவிக்கும் என சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
பகிரவும்...
0Shares