சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது – முதலமைச்சர்
தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக எதிர்வரும் 31ஆம் திகதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையிலும் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு என்று கூறியுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், “அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முகக் கவசம் வழங்கப்படுகிறது. அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.
இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது.
நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று குறைக்கப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிற்கும் 10-க்கும் மேற்பட்ட முறை நேரில் சென்று காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனை மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி அரசு சிறப்பாக செயற்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.