செஞ்சோலை படுகொலை – ஆண்டுகள் 12

மூன்று தசாப்த கால யுத்தம் ஏற்படுத்திச் சென்ற கோரச் சம்பவங்கள் ஏராளம். அவற்றில் மனதை கசக்கிப் பிழியும் பல சம்பவங்கள் காலத்தால் அழியாத கறைபடிந்த வரலாற்றுத் தடங்களாக – என்றும் மாறாத வடுக்களாக எம் மனதில் நிழலாடுகின்றன.

மனிதனாய் பிறந்த அனைவரது மனதையும் ஒருகணம் உலுக்கிய கோரச் சம்பவம் செஞ்சோலை படுகொலை. சின்னஞ்சிறு தளிர்கள் துளிர்விட்டு வரும்போதே அவற்றை சருகாக்கிய கோரச் சம்பவம் இடம்பெற்று ஆண்டுகள் 12.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், அப்பாவி சிறுமிகள் 61 பேர் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.

யுத்தத்தால் தமது உறவுகளை இழந்து பரிதவித்து நின்ற அந்த சிறுமிகள் வேரோடு கருவறுக்கப்பட்ட நாள், இலங்கை வரலாற்றில் ஒரு கறைபடிந்த நாள். குறித்த தாக்குதலில் பலர் தமது அவயவங்களை இழந்து வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருப்பது பலரும் அறியாத உண்மை.

மாணவிகளான குறித்த சிறுமிகள் மீது மனிதாபிமானமற்ற வகையில் இலங்கை படையினர் நடத்திய தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

எனினும், இவ்வாறான கோர தாக்குதல்களை தடுப்பதற்கு, ஐ.நா. உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த அமைப்புகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதென்பது பாதிக்கப்பட்டோரின் குற்றச்சாட்டுக்களாகும்.

நீதி கிடைக்காத கடந்த கால அநீதிகளின் பட்டியலில், இச்சம்பவமும் இடம்பிடிக்க, இன்றுவரை வெறும் நினைவாக மாத்திரம் இச்சம்பவம் இருப்பது வேதனையானது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்து, தமது அவயவங்களை இழந்து வாழும் சிறுமிகள், இன்றும் தமது வாழ்க்கையை செம்மைப்படுத்த வழியின்றி திண்டாடுகின்றனர்.

செஞ்சோலை சிறுவர் இல்லம் இன்றும் தமது மனிதாபிமான பணியை முன்னெடுத்துச் செல்கின்றது. எனினும், தமக்கான கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிட வசதி என்பவற்றில் பல இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக அங்கு தற்போது வசிக்கும் சிறார்கள் குறிப்பிடுகின்றனர். பெற்றோரை இழந்து வாழும் தமக்கு உதவ புலம்பெயர் அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென செஞ்சோலை சிறுமிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ்வாறானவர்களின் வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதோடு, அன்றைய படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !