சுவிஸ் தூதரக பெண் கடத்தப்படவில்லை – அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க
சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் கடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.
வெலிஓயா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் பணியாளர் கடத்தப்படவில்லை எனவும் அவருக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் பணியாளர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினால் பூரண அரச பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் பணியாளர் சட்டவிரோதமான முறையில் சுவிஸ் செல்ல முடியாது எனவும், அது இலங்கை சட்டங்களுக்கு முரணானது எனவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி விட்டு அதன் பின்னர் தேவை என்றால் குறித்த பெண் சுவிஸ் செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பகிரவும்...