சுவிட்சர்லாந்து நாட்டில் பெண் ஊழியரை கொலை செய்த நபர்!- 20ஆண்டுகள் சிறை விதித்த உயர் நீதிமன்றம்..

சுவிட்சர்லாந்து நாட்டில் பெண் ஊழியரை கொலை செய்த நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸில் உள்ள பேர்ன் நகரில் 57 வயதான நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தினால் தனது காப்பீட்டு பணத்தை பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

ஆனால், இவரது கோரிக்கையில் சில தவறுகள் இருப்பதை 38 வயதான பெண் ஊழியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதனால், நபர் காப்பீட்டு தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விபரீதத்தை உணராத அந்நபர் பெண் ஊழியரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் திகதி பெண் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.

ஆனால், கொலை செய்த இடத்தில் நபரின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

சில ஆண்டுகள் விசாரணை நடைபெற்று வந்துள்ள நிலையில், கடந்தாண்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், சம்பவம் நிகழ்ந்தபோது தான் மன்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறி இத்தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நபர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரணை செய்தபோது அவர் மனநலத்தால் பாதிக்கப்படவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்பு சரியானது எனக் கூறி 20 ஆண்டுகள் தண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !